அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு தொல்லியல் விழிப்புணர்வு

மாமல்லபுரம்,அரசுப் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு, தொல்லியல் பயிற்சியுடன், விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில், அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில், ஆண்டிற்கு 1,000 பேர் வீதம்,தொல்லியல் விழிப்புணர்வு பயிற்சி அளிக்க, சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி 1,000 பேருக்கு, ஏற்கனவே பயிற்சியளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இரண்டாம் கட்ட பயிற்சி, தற்போது 1,000 பேருக்கு அளிக்கப்படுகிறது.

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 100 பேருக்கு, நான்கு நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டது.

நம் நாட்டின் பழமை பாரம்பரிய கலாசாரம், கலைகள், வாழ்வியல் நடைமுறைகள் உள்ளிட்டவற்றை உணர்த்துபவையாக விளங்கும் பாரம்பரிய நினைவுச் சின்னங்கள், வருங்கால தலைமுறையினர் அறிய அவற்றை பாதுகாப்பது, இன்றைய தலைமுறையினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து விளக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து ஆசிரியர்கள், இரண்டு நாட்கள் களப் பயணமும் சென்றனர்.

மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் கால பாரம்பரிய சிற்பங்களை, நேற்று கண்டனர். அரசு கட்டட, சிற்பக்கலைக் கல்லுாரி விரிவுரையாளர் கென்னடி, இங்கு ஒரே பாறையில் தனித்தனி ரதமாக செதுக்கப்பட்ட ஐந்து ரதங்கள்.

ஒற்றைக் கற்றளி, கடற்கரை கோவில், அர்ஜுனன் தபசு, குடைவரைகள், ஆதிவராக பெருமாள் கோவில் சிற்பங்கள் ஆகியவை குறித்தும் விளக்கி, பல்லவர்களின் கலையம்ச வடிவமைப்பை விவரித்தார்.

இதற்கு முன் பொழுதுபோக்கு சுற்றுலா வந்துள்ளதாக தெரிவித்த பல ஆசிரியர்கள், அதன் சிறப்புகளை தற்போதுதான் அறிந்து வியந்ததாக கூறினர்.

Advertisement