சீமான் மீது விஜயலட்சுமிக்கு காதல் இல்லை பாலியல் வழக்கில் ஐகோர்ட் கருத்து

சென்னை:நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். இவருக்கு எதிராக சென்னை வளசரவாக்கம் போலீசில், நடிகை விஜயலட்சுமி பாலியல் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், சீமான் மீது மோசடி, பலாத்காரம், கொலை மிரட்டல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ், 2011-ல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், 2023ல், சீமான் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், ''வழக்கை சாதாரண வழக்காக கருத முடியாது. விஜயலட்சுமி புகாரை திரும்ப பெற்றாலும், பாலியல் வன்கொடுமை சட்டப்பிரிவின் கீழ் சீமானுக்கு எதிரான புகாரை, 12 வாரத்துக்குள்விசாரித்து, காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்.

''வழக்கில் விரிவான தீர்ப்பை பின்னர் பிறப்பிக்கிறேன்,'' என உத்தரவிட்டு, சீமானின் மனுவை தள்ளுபடி செய்தார்.

இந்த வழக்கில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

வழக்கை ஆய்வு செய்ததில், விஜயலட்சுமிக்கு சீமான் மீது எந்த காதலும் இல்லை; குடும்பம், திரைத்துறை பிரச்னை காரணமாக, விஜயலட்சுமி மற்றும் அவரது குடும்பத்தினர், சீமானை அணுகி உள்ளனர்.

அப்போது, விஜயலட்சுமியை திருமணம் செய்து கொள்வதாக, சீமான் அளித்த உறுதிமொழியின் படி, அவருடன் உறவு கொள்ளும்படி விஜயலட்சுமி கட்டாயப்படுத்தப்பட்டு உள்ளார்.

அதன்பின், சீமான் திருமணம் செய்து கொள்ள தவறியதால், விஜயலட்சுமி புகார் அளித்துள்ளார்.

பாலியல் வன்கொடுமை புகார் தீவிரமானது. அதை தன்னிச்சையாக திரும்ப பெற முடியாது. விஜயலட்சுமி தன் வாக்குமூலத்தில் கூறியுள்ள புகார்கள், சீமானுக்கு எதிரான குற்றச்சாட்டை உறுதிப்படுத்துகின்றன.

சீமான் வற்புறுத்தலால், ஆறு, ஏழு முறை விஜயலட்சுமி கருக்கலைப்பு செய்துள்ளதும், அவரிடம் இருந்து பெரும் தொகையை சீமான் பெற்றதாகவும், விஜயலட்சுமி புகாரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மிரட்டல் அடிப்படையில் சீமானுக்கு எதிரான புகாரை, விஜயலட்சுமி திரும்ப பெற்றுள்ளது தெளிவாகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement