100 நாள் வேலைக்கான சம்பளம் 3 மாதம் பாக்கியால் போராட்டம்

திருப்போரூர், பிப். 22--

நுாறு நாள் வேலை திட்டத்தை கிராமங்களில் முழுமையாக அமல்படுத்த கோரியும், தற்போது மூன்று மாதங்களாக நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்க கோரியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் நேற்று, திருப்போரூர் பி.டி.ஓ., அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் நடந்தது.

இதில், கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினர் லிங்கன் தலைமை வகித்தார்.

முன்னதாக 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, திருப்போரூர் பேருந்து நிலையத்திலிருந்து பேரணியாக புறப்பட்டனர். ஓ.எம்.ஆர்., செங்கல்பட்டு சாலை வழியாக, பி.டி.ஓ., அலுவலகம் வந்தடைந்து, காத்திருப்பு போராட்டத்தை நடத்தினர்.

அப்போது, 100 நாள் வேலைக்கான, மூன்று மாத நிலுவை சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடியாக முழுமையாக வேலை வழங்க வேண்டும் என கோஷம் எழுப்பினர்.

அங்கு வந்த ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் பேச்சு நடத்தி, வரும் வியாழன் முதல் 100 நாள் வேலை வழங்குவதாகவும், சம்பளம் பாக்கியை உடனே வழங்க ஏற்பாடு செய்வதாகவும் உறுதியளித்தனர்.

இதையடுத்து, போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

Advertisement