வெம்பக்கோட்டை அகழாய்வில் சங்கு பதக்கம் கண்டெடுப்பு

சென்னை:விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில், முதல்முறையாக சங்கு பதக்கம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெம்பக்கோட்டை என்ற ஊரில், தமிழக தொல்லியல் துறை சார்பில், மூன்றாம் கட்ட அகழாய்வு பணி நடக்கிறது.

இதில், கண்ணாடி மணிகள், அரிய கல்மணிகள், சுடுமண் பொம்மைகள், தங்க மணி, கருப்பு, சிவப்பு பானை ஓடுகள், அகல் விளக்குகள் உள்ளிட்ட தொல்பொருட்கள் கிடைத்துள்ளன.

தற்போது, சங்கால் செய்யப்பட்ட பதக்கம், சுடுமண் ஆட்டக்காய்கள் உள்ளிட்டவை கிடைத்து உள்ளன.

இவை குறித்து, தமிழக தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தன் சமூக வலைதள பக்கத்தில், 'வெம்பக்கோட்டை எனும் விசித்திரக் கோட்டை' என்ற தலைப்பில் கூறியுள்ளதாவது:

பண்டைய தமிழர்களை நோக்கிய பயணமான வெம்பக்கோட்டை, மூன்றாம் கட்ட அகழாய்வில், 24.9 செ.மீ., நீளமும், 12.6 செ.மீ., விட்டமும், 6.68 கிராம் எடையும் உடைய சங்கால் செய்யப்பட்ட பதக்கம் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் நடந்த அகழாய்வுகளில், முதல் முறையாக கிடைத்த பதக்கம் இதுதான் என்பது கூடுதல் சிறப்பு.

மேலும், இந்த அகழாய்வில் சுடுமண்ணால் செய்யப்பட்ட ஆட்டக்காய் ஒன்றும் கிடைத்துள்ளது. 27.7 மி.மீ., உயரமும், 25.5 மி.மீ., விட்டமும் உடைய இந்த ஆட்டக்காயின் வடிவமாக, ஒருபுறம் விலங்கின் தலைப்பகுதியும், மறுபுறம் பறவையின் தலைப்பகுதியும் உள்ளது வியப்பளிக்கிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement