முன்பதிவின்றி கடைசி நேரத்தில் ஏறினால் 'வந்தே பாரத்'தில் அபராதத்துடன் கட்டணம் ரயில் பயணியர் புகார்

சென்னை:'வந்தே பாரத்' ரயில்கள் புறப்படுவதற்கு, 30 நிமிடங்களுக்கு முன்னதாக, 'புக்கிங்' நிறுத்தப்படுகிறது. கடைசி நேரத்தில் ஏறும் பயணியரிடம் அபராதத்துடன் கட்டணம் வசூலிப்பதாக, பயணியர் புகார் தெரிவித்துள்ளனர்.

சென்னை சென்ட்ரல் - மைசூரு, கோவை; எழும்பூர் - திருநெல்வேலி, நாகர்கோவில் உட்பட எட்டு வழித்தடங்களில், 'வந்தே பாரத்' ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பயணியர் கூட்டம் அதிகமாக இருக்கிறது.

பயணியர் தேவை கருதி, எழும்பூர் - திருநெல்வேலி வந்தே பாரத் ரயில்களில், 16 பெட்டிகள் இணைத்து இயக்கப்படுகின்றன. வந்தே பாரத் ரயில்கள் புறப்படுவதற்கு, 30 நிமிடங்களுக்கு முன்னதாக, இந்த ரயிலுக்கான 'டிக்கெட் புக்கிங்' நிறுத்தப்படுகிறது.

இருப்பினும், கூட்ட நெரிசல் இல்லாத வார நாட்களின் போது, சில இருக்கைகள் காலியாக இருக்கின்றன. அந்த இருக்கையில் பயணிக்க, கடைசி நேரத்தில் அனுமதிக்கப்படுகிறது.

ஆனால், அந்த பயணியரிடம் அபராதத்துடன் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது, பயணியரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து, பயணியர் சிலர் கூறியதாவது:

'வந்தே பாரத்' ரயில்களில் அலுவலக நாட்களில் முன்பதிவு போக, சில டிக்கெட்டுகள் காலியாக இருக்கின்றன. கடைசி, 30 நிமிடங்களுக்கு முன், இந்த டிக்கெட்டுகளை கவுன்டர்களிலும், ஆன்லைனிலும் வழங்குவதில்லை.

இந்த டிக்கெட்டுகள், வந்தே பாரத் ரயிலில் உள்ள டிக்கெட் பரிசோதகர்களால் மட்டுமே வழங்கப்படுகின்றன. வழக்கமான கட்டணத்துடன், அபராதத் தொகையும் சேர்த்து, டிக்கெட் வழங்கப்படுகிறது.

இது, பயணியருக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. வழக்கமான டிக்கெட் கட்டணத்துடன், குறைந்தபட்சம், 400 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் கேட்ட போது, 'வந்தே பாரத் ரயிலுக்கான விதிமுறைகள் இப்படி தான் இருக்கின்றன. அதில், ரயில்வே வாரியம் தான் மாற்றம் செய்ய வேண்டும்' என்றனர்.

Advertisement