விரைவில் சித்தா பல்கலை அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி

சென்னை:''தமிழகத்தில் சித்தா பல்கலை விரைவில் செயல்பாட்டுக்கு வரும்,'' என, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.

சென்னை கிண்டியில் உள்ள, தமிழ்நாடு எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையில், சர்வதேச சித்தா மருத்துவ மாநாடு நேற்று நடந்தது.

இதில், 278 சித்தா ஆராய்ச்சிக் கட்டுரை தொகுப்பு கொண்ட, 'அகத்தியம் - 2025' நுாலை, அமைச்சர் சுப்பிரமணியன் வெளியிட்டார். பின், அவர் பேசியதாவது:

தமிழகத்தில், மூன்று அரசு, 13 தனியார் என, மொத்தம் 16 சித்தா மருத்துவக் கல்லுாரிகள் இயங்கி வருகின்றன. இங்கு ஒவ்வொரு ஆண்டும், 3,800க்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர்.

தி.மு.க., ஆட்சிப் பொறுப்பேற்ற பின், சித்தா மருத்துவ பல்கலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. கவர்னர் ஒப்புதல் அளித்திருந்தால், பல்கலை செயல்படத் துவங்கி இருக்கும். ஆனால், கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பினார்.

வரும் சட்டசபை கூட்டத்தொடரில், சித்தா பல்கலை அமைப்பதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டு, மீண்டும் கவர்னருக்கு அனுப்பி வைக்கப்படும். விதிப்படி, இரண்டாவது முறை அனுப்பினால், கவர்னர் ஒப்புதல் அளிக்க வேண்டும். எனவே, விரைவில் தமிழகத்தில் சித்தா பல்கலை வரும்.

நாமக்கல்லில், சித்தா மருத்துவக் கல்லுாரி விரைவில் அமைக்கப்படும். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துாரில் அஸ்வகந்தா மூலிகைச் செடிகள், 200 ஏக்கரில் பயிரிடப்பட்டு வருகின்றன.

இதன் வாயிலாக, 2,000 விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர். பாரம்பரிய மருத்துவர்களுக்கு ஓய்வூதியமாக 1,000 ரூபாய் வழங்கப்பட்டதை, 3,000 ரூபாயாக உயர்த்தி வழங்குகிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement