அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசிய வாலிபர் கைது

திருவெண்ணெய்நல்லுார் : அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசிய விவகாரத்தில் தலைமறைவாக இருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.


விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த நவம்பர் 30ம் தேதி வீசிய பெஞ்சல் புயல் அதனை தொடர்ந்து பெய்த கனமழையால், திருவெண்ணெய்நல்லுார் பெண்ணையாறு மற்றும் மலட்டாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு 50க்கும் மேற்பட்ட கிராமங்களை வௌ்ளம் சூழ்ந்தது.


அதில், வாழ்வாதாரத்தை இழந்ததால், ஆத்திரமடைந்த இருவேல்பட்டு கிராம மக்கள் கடந்த டிசம்பர் 3ம் தேதி அதிகாரிகளை கண்டித்து திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.


தகவலறிந்து பேச்சுவார்த்தை நடத்த வந்த அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோரை கிராம மக்கள் முற்றுகையிட்டு, அதிகாரிகள் முன்னறிவிப்பின்றி ஆற்றில் தண்ணீர் திறந்து விட்டதால் தான் பாதிப்பு ஏற்பட்டதாக கூறி வாக்குவதாம் செய்ததோடு, அமைச்சர் உள்ளிட்டோர் மீது சேற்றை வாரி வீசினர்.


இதுதொடர்பாக அமைச்சரின் தனி பாதுகாப்பு சிறப்பு அலுவலர் அருள்தாஸ் அளித்த புகாரின் பேரில், அமைச்சர் மற்றும் அதிகாரிகளை திட்டி, சேற்றை வாரி வீசி மிரட்டல் விடுத்து பணி செய்ய விடாமல் தடுத்ததாக இருவேல்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகன் ராமகிருஷ்ணன்,24; மற்றும் அவரது உறவினர் விஜயராணி ஆகியோர் மீது திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்கு பதிந்து தேடிவந்தனர்.


இந்நிலையில் இருவேல்பட்டு கிராமத்தில் பதுங்கியிருந்த ராமகிருஷ்ணனை நேற்று முன்தினம் இரவு தனிப்படை போலீசார் கைது செய்து, விழுப்புரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.


வழக்கை விசாரித்த மாஜிஸ்திரரேட், ராமகிருஷ்ணனை வரும் 7ம் தேதிவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
அதன்பேரில், அவர் விழுப்புரம் சிறையில் அடைக்கப்பட்டார்.


தலைமறைவாக உள்ள விஜயராணியை போலீசார் தொடர்ந்து தேடிவருகின்றனர்.

காத்தோடு போச்சு

சேற்றை வாரி வீசிய அன்று மாலை, நிருபர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி, 'இச்சம்பவம் வெறும் அரசியலுக்காக மட்டுமே நடந்துள்ளது. யார் சேற்றை வாரி அடித்தார்கள் என்பது அனைவருக்கும் நன்றாக தெரியும். நான் அதனைக் கண்டுகொள்ளவில்லை என்றார். இந்நிலையில், இவ்விவகாரத்தில் போலீசார் கைது நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது, கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement