ஊழல் கருவியாக பணியாளர்களை பயன்படுத்தும் உயர் அதிகாரிகள்'கப்பம்' செலுத்த நிர்ப்பந்தத்திற்கு சங்கம் கண்டனம்

தஞ்சாவூர்: டெல்டா மாவட்டங்களில் லஞ்ச முறைகேடுகளுக்கு, கொள்முதல் பணியாளர்களை ஊழல் கருவிகளாக பயன்படுத்தும் உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக தொழிலாளர் சங்கமான ஏ.ஐ.டி.யு.சி., மாநில பொதுச் செயலர் சந்திரகுமார், முதல்வருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
இது குறித்து, ஏ.ஐ.டி.யு.சி., மாநில பொதுச் செயலர் சந்திரகுமார் கூறியதாவது:
நெல் கொள்முதல் நிலையங்களில், லஞ்சம் பெற்றால் புகார் அளிக்க, 'வாட்ஸாப்' எண் அறிவிக்கப்பட்டுள்ளது. புகார்களை பெற்று, சிலரை வேலையை விட்டு நீக்குவதும், கைது செய்வதும் விளம்பரத்துக்கு மட்டுமே உதவும்; தீர்வுக்கு உதவாது.
எழுதப்படாத ஒப்பந்தம்
கொள்முதல் செய்த நெல்லை, 48 மணி நேரத்துக்குள் குடோனுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற விதியை பின்பற்றப்படுவதில்லை. கொள்முதல் நிலையங்களில் பல நாட்கள் வைத்து அனுப்புவதால், எடை குறைவு ஏற்பட்டால், கொள்முதல் பணியாளர்கள் இழப்புத் தொகையை செலுத்த வேண்டும்.
கொள்முதல் நிலையங்களில் இருந்து லாரியில் நெல்லை எடுத்து செல்ல, டிரைவர்களுக்கு 1,500 முதல் 4,000 வரை லஞ்சம் கொடுக்க வேண்டும்.
கொள்முதல் நிலையங்களுக்கு தேவையான, தளவாட பொருட்களை நிர்வாகப் பொறுப்பில் அனுப்பாமல், கொள்முதல் பணியாளர்கள் குறைந்து 5,000 ரூபாய் செலவு செய்து எடுத்து வருகின்றனர். தினமும் கணக்கு பெறுக்கின்ற அலுவலகப் பிரிவிற்கு 2,000 முதல் 4,000 வரை கப்பம் கட்ட வேண்டும்.
கொள்முதல் அலுவலர்கள் மூட்டை ஒன்றுக்கு 2 ரூபாய் வீதம், வாரந்தோறும் வசூலித்து , உயர் அதிகாரிகள் வரை பங்கிட்டு செய்து கொடுக்க வேண்டும். உதவி மேலாளர், துணை மேலாளர் இவர்களுக்கெல்லாம் மாதம் 3,000 முதல் 50,000 ரூபாய் வரை எழுதப்படாத ஒப்பந்தம்.
ஆய்வுக்கு வரும் குழுக்களுக்கு 5,000 ரூபாய் கொடுத்து அனுப்ப வேண்டும். கொடுக்க மறுத்தால் வேலை பறிப்பு, ரெக்கவரி போடும் நிலை உள்ளது.
இதை தவிர அரசியல் கட்சிகள் 5,000 ரூபாய், பல கிராமங்களில் மூட்டைக்கு 2 ரூபாய், கோவில் கும்பாபிஷேகத்திற்கு நிதி, கொள்முதல் நிலைய இடம் வாடகை கொடுப்பவருக்கு மூட்டைக்கு குறிப்பிட்ட தொகை என பல நெருக்கடிகளை கொள்முதல் பணியாளர்கள் சந்தித்து வருகின்றனர்.
இந்த பல கோடி ரூபாய் ஊழல்களை, விவசாயிகளிடம் லஞ்சமாக பெற்றால் தான், ஈடு செய்ய முடியும் என்ற நிலையை உருவாக்கியுள்ளனர். இதற்கு, கொள்முதல் பணியாளர்கள் மற்றும் சுமைதுாக்கும் தொழிலாளர்களை, ஊழலுக்கு கருவியாக பயன்படுத்துகின்றனர். இது வேதனைக்குரியது.
கட்டப் பஞ்சாயத்து
டெல்டா மாவட்டம் உள்ளிட்ட அனைத்து மண்டல மேலாளர்களால் விளக்கம் கேட்காமல் விசாரணை ஏதும் செய்யாமல், தவறிழைத்தது நிரூபிக்கப்படாமல், செயல் முறை ஆணை ஏதும் பிறப்பிக்கப்படாமல், கட்ட பஞ்சாயத்து முறையில் பல கோடி ரூபாய் வசூலிக்கப்படுகிறது. ஊழல் முறைகேடுகளை களைய, நிர்வாகம் தனது பொறுப்பை சரியாக நிறைவேற்ற வேண்டும்.
நெல் எடை குறைவிற்காக, கட்டப் பஞ்சாயத்து முறையில், கொள்முதல் பணியாளர்களிடம் பணம் வசூல் செய்யும் முதுநிலை மண்டல மேலாளர்கள் மீது கிரிமினல் மற்றும் துறைரீதியான நடவடிக்கை அரசு மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.


**************************

***************

Advertisement