9 மாத குழந்தையின் மூளை மையப்பகுதி கட்டியை மூடி மதுரை ஹானா ஜோசப் மருத்துவமனை சாதனை இந்தியாவில் முதன்முறையாக நடந்தது

1

மதுரை: இந்தியாவில் முதன்முறையாக மதுரை ஹானா ஜோசப் மருத்துவமனையில் 9 மாத ஆண் குழந்தையின் மூளை மையப்பகுதியில் (நெற்றிப் பொட்டு) உருவான கட்டி வெடித்து பரவிய ரத்தக்கசிவை வெற்றிகரமாக நிறுத்தி டாக்டர்கள் சாதனை புரிந்துள்ளனர்.

மதுரையில் நேற்று இந்த மருத்துவமனையின் தலைவர் டாக்டர் எம்.ஜே.அருண்குமார் கூறியதாவது:

லட்சத்தில் ஒரு குழந்தைக்கு இதுபோன்று நெற்றிப்பொட்டில் கட்டி உருவாகும். கோடியில் ஒரு குழந்தைக்கு அந்த கட்டி உடைந்து உயிர்இழப்பை ஏற்படுத்தும்.

எங்கள் மருத்துவமனைக்கு 9 மாத ஆண் குழந்தை 'கோமா' நிலையில் வெண்டிலேட்டர் உதவியுடன் அழைத்து வரப்பட்டது. சிடி ஸ்கேன் பரிசோதனையில் மூளையில் ரத்தக்கசிவு பரவலாகஇருந்தது தெரிந்தது.

பிறகு ஆஞ்சியோகிராம் எடுத்து பார்த்தபோது மூளையின் மையப்பகுதி ரத்தக்குழாயில் கட்டி உருவாகி வெடித்து ரத்தக்கசிவு ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது. மண்டையோட்டை திறந்து செய்யும் மைக்ரோ சர்ஜிகல் கிளிப் முறைக்கு பதிலாக நியூரோ எண்டோவாஸ்குலர் மூலம் சிகிச்சை அளிக்க முடிவுசெய்தோம்.

இம்முறையில் குழந்தையின் வலது தொடையில்சிறிய துளையிட்டு மூளையின் ரத்தநாளத்தை அடையும் மிக மிகச்சிறிய மைக்ரோ கத்தீட்டர்ஸை அனுப்பி பலுான் அசிஸ்டன்ஸ் உடன் 5 பிளாட்டினம் ஹைட்ரோ சாப்ட் காயில்களை உள்செலுத்தி கட்டியை முறையாக மூடி ரத்தக்கசிவை முழுமையாக தடுத்தோம்.

ஐந்து நாட்கள் கண்காணிப்பிற்கு பிறகு குழந்தையின் கை, கால்கள் மீண்டும் செயல்பட துவங்கியது. பல்வேறு கட்ட மருத்துவ பரிசோதனைக்கு பின் குழந்தை 'நார்மல்' ஆக உள்ளது என உறுதிசெய்து 17 நாட்களுக்கு பின் 'டிஸ்சார்ஜ்' செய்தோம். இவ்வகை சிகிச்சை ஏற்கனவே உலகில் 3 நாடுகளில் மட்டுமே நடந்துள்ளது. 'சக்சஸ்' ஆகவில்லை.

4வது நாடாக இந்தியாவில், அதுவும் முதன்முறையாக எங்கள் மருத்துவமனையில் நடந்த இவ்வகை அரிய சிகிச்சை வெற்றிகரமாக நடந்துஉள்ளது என்றார். சிகிச்சை அளித்த டாக்டர்கள் என்.அருண்குமார், விநாயகமணி மற்றும் மார்க்கெட்டிங் மேலாளர் சேகர் உடனிருந்தனர்.

Advertisement