துவாரகா நகரம் குறித்து கடலுக்கு அடியில் ஆய்வு



துவாரகா : பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஆட்சி செய்த பழமையான துவாரகா நகரம் குறித்து, குஜராத் கடல் பகுதியில் இந்திய தொல்லியல் துறையினர் ஆய்வை துவக்கியுள்ளனர்.

குஜராத்தின் தேவபூமி துவாரகா மாவட்டத்தில் உள்ள துவாரகா என்ற நகரம், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கர்ம பூமி என பக்தர்களால் போற்றப்படுகிறது.


ஆனால், பகவான் கிருஷ்ணர் ஆட்சி செய்த துவாரகா நகரம், அரபிக் கடலில் பெட் துவாரகா பகுதியில் கடலுக்கு அடியில் மூழ்கி விட்டதாக ஒரு தரப்பினர் கூறினர். இந்த நகரம், 5,500 ஆண்டுகள் பழமையானது என்றும் நம்பப்படுகிறது.


இந்நிலையில், குஜராத் கடல் பகுதியில், 1963 மற்றும் 2005- - 07- வரை அகழாய்வு பணி மேற்கொள்ளப்பட்டது. இதில், ஒரு பழமையான நகரம் கடலுக்கு அடியில் மூழ்கியிருப்பதற்கான தடயங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.


பிரமாண்டமான நீண்ட சுவர், சிதைந்த கற்சிலைகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதன்பின், 18 ஆண்டுகளாக அகழாய்வு நடக்கவில்லை.



இந்நிலையில், கடலுக்கடியில் மீண்டும் அகழாய்வு பணியில் இந்திய தொல்லியல் துறையின், தொல்லியல் பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.


தொல்லியல் துறை கூடுதல் இயக்குநர் ஜெனரல் பேராசிரியர் அலோக் திரிபாதி தலைமையில், அகழாய்வு இயக்குநர் எச்.கே.நாயக், உதவி மேற்பார்வை தொல்பொருள் ஆய்வாளர் அபராஜிதா சர்மா, பூனம் விந்த், ராஜ்குமாரி பார்பினா ஆகிய ஐந்து பேர், கோமதி க்ரீக்கிற்கு அருகே, ஒரு பகுதியை தேர்வு செய்து, கடலுக்கடியில் அகழாய்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

முதன்முறையாக, இந்த பணியில் பெண்கள் அதிகளவில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். 2001 முதல், லட்சத்தீவின் பங்காரம் தீவு, தமிழகத்தின் மகாபலிபுரம், குஜராத்தின் துவாரகா, மணிப்பூரின் லோக்தக் ஏரி, மஹாராஷ்டிராவின் எலிபண்டா தீவு போன்ற இடங்களில், தொல்லியல் துறையின் தொல்லியல் பிரிவினர் நீருக்கடியில் ஆய்வு நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement