பொது கணக்கு குழு ஆய்வு கண்துடைப்பா? ஸ்ரீபெரும்புதுார், குன்றத்துாரில் குற்றச்சாட்டு

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் மற்றும் குன்றத்தூர் ஒன்றியத்தில் நடைபெறும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை, தமிழக சட்டசபை பொதுக்கணக்கு தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் உறுப்பினர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

உறுப்பினர்களான போளூர் எம்.எல்.ஏ., கிருஷ்ணமூர்த்தி, திருத்தணி எம்.எல்.ஏ., சந்திரன், திரு.வி.க. நகர் எம்.எல்.ஏ., சிவகுமார், பெரம்பூர் எம்.எல்.ஏ., சேகர், கலெக்டர் கலைச்செல்வி உள்ளிட்டோர் ஆய்வில் பங்கேற்றனர்.

ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், வல்லம் -- வடகால் சிப்காட்டில் அமைந்துள்ள 'ராயல் என்பீல்டு' பைக் தொழிற்சாலையில் ஆய்வு மேற்கொண்டனர்.

தொடர்ந்து, பிள்ளைப்பாக்கம் ஊராட்சியில், 'பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா' திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் குடியிருப்புகள், சந்தவேலுார் ஊராட்சியில் 30 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் உள்ளிட்டவைகளை ஆய்வு மேற்கொண்டனர்.

பின், மொளச்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில், கர்ப்பிணியர்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை பொது கணக்கு தலைவர் மற்றம் உறுப்பினர்கள் வழங்கி, வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர்.

தொடர்ந்து, கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 24 மாற்றுத்திறனாளிகளுக்கு 12.10 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவி வழங்கி, மக்கள் நல்லுறவு கூட்ட அரங்கில், அதிகாரிகளுடனான ஆய்வு கூட்டம் நடந்தது.

இதில், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேசன், ஊராட்சி குழு தலைவர் மனோகரன், ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் ஆர்த்தி, சப் -- கலெக்டர் ஆஷிக், ஸ்ரீபெரும்புதுார் வருவாய் கோட்டாட்சியர் சரவணக்கண்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

குன்றத்துார்



தொடர்ந்து, குன்றத்துார் அருகே மாங்காடு நகராட்சியில் பேருந்து நிலையம் அமைக்க இடம் ஒதுக்கிய பகுதி, சிக்கராயபுரம் ஊராட்சியில் நீர்த்தேக்கமாக மாற்றப்பட உள்ள கல்குவாரி, படப்பை மேம்பால பணி, சாலமங்கலம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு குடியிருப்பு பகுதிகளை பார்வையிட்டனர்.

அதன்பின், செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்க பதில் அளித்த செல்வப்பெருந்தகை, 'காங்கிரஸ் கட்சி தலைவர்களை மாற்ற வேண்டும் என புகார் எழுவது, எங்கள் கட்சியில் சகஜம்' என்றார்.

14 உறுப்பினர்கள் 'ஆப்சென்ட்'




காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை, பார்லிமென்ட் மற்றும் சட்டசபையில் இருந்து பல்வேறு குழுவினர் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும், குறைந்த அளவிலான உறுப்பினர்களே ஆய்வில் பங்கேற்று வருவது வாடிக்கையாக உள்ளது. நேற்று நடந்த சட்டசபை பொது கணக்கு குழு ஆய்வில், மொத்தம் உள்ள 18 உறுப்பினர்களில், 4 பேர் மட்டுமே பங்கேற்றனர். இதனால், கண்துடைப்பிற்காக ஆய்வுகள் நடப்பதாக பகுதிவாசிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.



- நமது நிருபர் குழு -

Advertisement