விவசாயிகளின் புகார்களுக்கு 15 நாட்களுக்குள்  தீர்வு குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் உறுதி

தேனி: குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வழங்கிய மனுக்கள் மீது மேல்நடவடிக்கை எடுக்கப்பட்டு, 15 நாட்களுக்குள் பதில் கடிதம் அனுப்பப்படும் என விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் ரஞ்ஜீத்சிங் உறுதி அளித்தார்.

தேனி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்திற்கு கலெக்டர் தலைமை வகித்தார். வேளாண் இணை இயக்குனர் சாந்தாமணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்) வளர்மதி, மேகமலை புலிகள் காப்பகத்தின் துணை இயக்குனர் ஆனந்த், மாவட்ட வன அலுவலர் சமர்த்தா, தோட்டக்கலை துணை இயக்குனர் நிர்மலா, அனைத்துத்துறை அலுவலர்கள், விவசாயிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:

கண்ணன், விவசாயிகள் சங்கம், மாவட்டச் செயலாளர்: உத்தமபாளையம் வருவாய் வட்டம், கோட்டூர் கிராமத்தில் 1.47 எக்டேர் நிலம் கிரையம் பெற்று பட்டா பெற்றுள்ள நிலையில், கணினி சிட்டாவில் 0.47 ஏக்கர் என தவறுதலாக பதிவு செய்ததை மாற்ற, 3 ஆண்டுகள் தொடர்ச்சியாக விண்ணப்பித்தும் நடவடிக்கை இல்லை. பிற ஆவணங்களில் சரியாக உள்ளதால் கலெக்டர் ஆய்வு செய்து, கணினி சிட்டாவை முறைப்படி வழங்கிட வேண்டும்.

சீனிராஜ், மாவட்டத் தலைவர், தமிழக தேசிய விவசாயிகள் சங்கம்: 1989ல் முன்னாள் முதல்வர் கருணாநிதி விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கினார்.

முதல்வர் ஸ்டாலின் அரசு, வேளாண் மின் இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொறுத்தப்படும் என அறிவித்துள்ளது வேதனை அளிக்கிறது. இதனை அரசு நிறுத்த வேண்டும். வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால் மாநிலம் முழுவதும் போராட்டத்தைமுன்னெடுப்போம்.

மக்காச்சோள ஆராய்ச்சி மையம் தேவை



பாண்டியன், தலைவர் மாவட்ட விவசாயிகள் சங்கம்: 500 கிலோ விதை விதைத்தால் அறுவடையில் 5000 கிலோ மக்காச்சோளம் கிடைக்கும். விவசாயிகள் பயன்படும் வகையில் மாவட்டத்தில் மக்காச்சோள ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும்.

சாந்தாமணி, வேளாண் இணை இயக்குனர்: மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு திண்டுக்கல் வாகரையில் ஆராய்ச்சி மையம் இயங்குகிறது. இருப்பினும் ஆய்வுசெய்து தேனி மாவட்டத்தில் துவக்க பரிந்துரைக்கப்படும்.

முருகன், விவசாயி, பெரியகுளம்: பெரியகுளத்தில் முன்பு மா சந்தை நடந்தது. மீண்டும் பெரியகுளத்தில் சந்தை உருவாக்க வேண்டும். அகமலை இயற்கை விவசாயிகளுக்கு இயற்கை விவசாயிகளுக்கான சான்றிதழ் வழங்க வேண்டும்.

பிரகாஷ், சிகுஓடை பாசன விவசாய சங்கம்: சிகுஓடை கண்மாய் பாசன பகுதிகள், குடியிருப்புப் பகுதிகளில் ஆயிரம் அடிக்கு கீழே நிலத்தடி நீர்மட்டம் சென்றுள்ளது. எனவே,கண்மாயின் நீர்வரத்து பாதையை துார்வார வேண்டும். மேலும் ஆகாச கங்கை நீரோடை பகுதியில் உள்ள தடுப்பணை கட்ட மதுரை பொதுப்பணித்துறை ஆய்வு செய்து சென்ற நிலையில் அத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

இது ஆய்வு கூட்டம் அல்ல



கலெக்டர், விவசாயிகள் குறைதீர் கூட்டம் மனுக்களுக்கான ஆய்வு கூட்டம் அல்ல. மாதத்திற்கு ஒரு முறை நடத்தப்படும் இக்கூட்டத்தில் அனைத்து விவசாயிகளும் பேச சம வாய்ப்பு வழங்கப்பட்டு, குறைகள் கவனமாக கேட்கப்படும். பயிர்கடன், வனத்துறை விவசாயிகள் பிரச்னைகள் குறித்தும் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் வருவாய்த்துறை, பிற துறை பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும். விவசாயிகள் புகார் மீது நடவடிக்கை எடுத்து 15 நாட்களுக்குள் சம்மந்தப்பட்ட விவசாயிகளின் முகவரிக்கு பதில் கடிதம் அனுப்ப உத்தரவிட்டுள்ளேன். அடுத்த கூட்டத்தில் ஏற்கனவே வழங்கிய மனுக்கள் மீதான ஆய்வு நடத்தப்படாது. புதிய மனுக்கள் குறித்தும், வளர்ச்சி திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்படும் என்றார்.

Advertisement