சுவாரசியமிக்கு கவிக்கோவின் ஆவணப்படம்..





பொதுவாக ஆவணப்படம் என்பது உண்மைத்தன்மையின் அடிப்படையில் எடுக்கப்படுவதால் அதில் சுவாரசியத்தை எதிர்பார்க்க முடியாது, சுருங்கச் சொன்னால் பார்வையாளர்களை அமைதியாக ஒரு மணி நேரம் உட்காரவைப்பது கடினம்.

ஆனால் விதிவிலக்காக கவிக்கோ அப்துல் ரகுமான் பற்றிய ஆவணப்படம் 51 நிமிடம் ஒடியதே தெரியாத அளவிற்கு நிறைய தகவல்களுடன் சுவராசியமாக சென்றது.

உலகத் தாய்மொழி நாள் தினமான நேற்று சென்னை கேகேநகரில் உள்ள டிஸ்கவரி புக் பேலஸில் கவிக்கோ அப்துல்ரகுமானின் ஆவணப்படம் திரையிடப்பட்டது.

எண்பதுகளில் பலரும் எழுத்தாளர்கள் சுஜாதா,சாண்டியல்யன் ஆகியோரது கதைகளில் கிறங்கிக் கிடந்த காலகட்டத்தில், கவிதை மூலமாக பலரையும் தன்வசப்படுத்தியவர் கவிக்கோ.
Latest Tamil News
அவரது எழுத்துக்களை வாசித்து அதன் மூலம் அவரை நேசித்தவர்கள் பலர் அவரைப்பற்றிய முழுமையாக அறிந்து கொள்ளும் நோக்கில் அரங்கில் குழுமியிருந்தனர்.

அவர்களின் எதிர்பார்ப்பை ஆவணப்பட இயக்குனர் பிருந்தா சாரதி பூர்த்தி செய்திருந்தார்,கொஞ்சம் புகைப்படங்களும் அதை விடக் கொஞ்சமான வீடியோக்களையும் மட்டுமே வைத்து மிக நேர்த்தியாக இந்த படத்தை உருவாக்கியுள்ளார்.கீட்டத்தட்ட 35 பேரை பேட்டி எடுத்து அதனை அழகாக எடிட் செய்யப்பட்டுள்ளது, ஒரு சில வினாடிகளே கடந்து செல்லும் காட்சிகளாக இருந்தாலும் அதிலும் அலட்சியம் காட்டாமல் மிக நுணுக்கமாக அந்த காட்சிகளை பதிவு செய்யப்பட்டுள்ளன, ஒளிப்பதிவு பெரிதும் பாராட்டப்பட வேண்டிய விஷயம், தெளிவாக, வித்தியாசமான பிரேம்களாக ரசிக்கும்படி வைத்திருந்தார்.
Latest Tamil News
ஆவணப்படத்தின் நிறைவில், டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன் வரவேற்புரை நிகழ்த்தினார்,கவிஞர் ஜெயபாஸ்கரன் 'தாய்மொழி நாள்' என்ற தலைப்பில் மிக அருமையாக பேசினார், ஆவணப்படம் குறித்து பேசும் போது நம்மிடம் அதிகம் போனால் நுாறு ஆளுமைகள் இருப்பர், அவர்களைப் பற்றி பேச, எழுத ஆவணப்படம் எடுக்க இயலாமல் போவது வருத்தம் தருகிறது, அந்த வருத்தத்தை துடைக்கும் முயற்சியாக இந்த ஆவணப்படம் வந்திருப்பதாக குறிப்பிட்டார்,சிவகுமார் தலைமை தாங்கினார் அஜயன் பாலா வாழ்த்துரை வழங்கினார்.இயக்குனர் பிருந்தா சாரதி ஏற்புரை நிகழ்த்தினார் அவரது ஏற்புரையில் கவிக்கோ ஆவணப்படம் இரண்டாம் பகுதியும் வெளிவருகிறது என்றார்.

கவிக்கோ அப்துல் ரகுமான் புகழ்பெற்ற கவிஞர் மற்றும் தமிழ்ப் பேராசிரியர் ஆவார். 'வானம்பாடி' இயக்கக் கவிஞர்களுடன் இணைந்து, தமிழ்க் கவிதை உலகில் முக்கியமான பங்களிப்பை செய்தவர். அவரது படைப்புகள் மூலம் தமிழ்க் கவிதை வடிவத்தை செழுமையாக்கினார். தமிழில் ஹைக்கூ, கஜல் போன்ற பிறமொழி இலக்கிய வடிவங்களை அறிமுகப்படுத்துவதிலும், பரப்புவதிலும் முக்கியப் பங்காற்றினார்.

அவரது முதல் கவிதைத் தொகுப்பான 'பால்வீதி' மூலம், உவமைகள், உருவகங்கள், படிமங்கள், குறியீடுகள் ஆகியவற்றின் வழியாக கவிதையை வெளிப்படுத்தும் புதிய முறையை அறிமுகப்படுத்தினார். 'ஆலாபனை' என்ற கவிதைத் தொகுப்புக்காக 1999 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருதைப் பெற்றார். மேலும், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தமிழன்னை விருது, தமிழக அரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருது, கலைமாமணி விருது உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிய அவர், 2017 ஜூன் 2 அன்று காலமானார். அவரது நினைவாக, கவிக்கோ அப்துல் ரகுமான் ஹைக்கூ பரிசுப் போட்டி போன்ற நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

சிறந்த கவிஞர்களுக்கு பரிசு வழங்குவதற்கு தேவையான வைப்பு நிதிக்காக தனது வீட்டையே விற்கச் சொன்னார் ,சினிமாவிற்கு பாட்டெழுத பலமான அழைப்பு வந்தபோதும் மறுத்துவிட்டார் என்பது உள்ளீட்ட பல தகவல்கள் மூலம் கவிக்கோ மீதான மரியாதையை அதிகப்படுத்தும் அந்த ஆவணப்படம் அடுத்த முறை எங்காவது திரையிட்டால் அவசியம் பாருங்கள்..

-எல்.முருகராஜ்

Advertisement