பிப்.26 முதல் மார்ச் 1 வரை நீதிமன்ற பணி புறக்கணிப்பு: வக்கீல் சங்க கூட்டுக்குழு அறிவிப்பு

திருச்சி: பிப்.26 முதல் மார்ச் 1 வரை நீதிமன்ற பணியில் இருந்து விலகி நிற்பதாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல் சங்கங்களின் கூட்டுக்குழு அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல் சங்கங்களின் கூட்டுக்குழு (ஜெ.ஏ.ஏ.சி.,)-ன் பொதுக்குழு கூட்டம் இன்று பிப்.22 தேதி, காலை 10.30 மணிக்கு தொடங்கி, திருச்சியில் நடைபெற்றது தலைவர் நந்தகுமார் தலைமையிலும், செயலாளர் கே.பன்னீர்செல்வன் மற்றும் பொருளாளர் டி.ரவி மற்றும் திருச்சி வழக்கறிஞர் சங்கத் தலைவர் செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வழக்கறிஞர் சட்டத் திருத்த வரைவு மசோதா-2025 வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று கோரி வரும் பிப்ரவரி 26 முதல்
மார்ச் 1 வரை வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணியிலிருந்து விலகி இருப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
வழக்கறிஞர் சட்டத் திருத்த வரைவு மசோதா-2025 வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று கோரியும், ஜனநாயக விரோத சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற கோரியும், வெளிநாட்டு சட்ட நிறுவனங்களையோ வழக்கறிஞர்களையோ இந்தியாவில் எந்த வகையிலும் அனுமதிக்க கூடாது என்று கோரியும் வரும் 26ம் தேதி அன்று அனைத்து நீதிமன்ற வாயில் முன்பாக மாபெரும் கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் செய்வதென்று முடிவு செய்யப்பட்டது.
வரும் பிப்.28ல் அனைத்து நீதிமன்ற வாயில் முன்பாக உண்ணா நிலை அறப்போராட்டம் செய்வது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


