லாகூரில் ஒலித்த இந்திய தேசிய கீதம்; ஆஸி.,- இங்கி., போட்டியில் குழப்பம்

லாகூர்: ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியின் போது தவறுதலாக இந்திய தேசிய கீதம் ஒலிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
எல்லைத் தாண்டிய தீவிரவாதம், பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளிட்ட காரணங்களால், சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடக்கும் பாகிஸ்தானுக்கு செல்ல இந்தியா மறுப்பு தெரிவித்து விட்டது. இதனால், இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடந்து வருகின்றன.
இந்தத் தொடரின் முதல் போட்டியில் வங்கதேசத்தை எதிர்த்து இந்திய அணி விளையாடியது. இந்தப் போட்டி டி.வி., சேனல்களில் ஒளிபரப்பாகும் போது, சாம்பியன்ஸ் டிராபி நடத்தும் பாகிஸ்தான் நாட்டின் பெயர் மறைக்கப்பட்டிருந்தது. இது அந்த நாட்டிற்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில், லாகூரில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம் இன்று நடந்து வருகிறது. இந்தப் போட்டிக்கு முன்பாக இரு அணியின் வீரர்களும், அவரவர் நாட்டு தேசிய கீதத்திற்கு மரியாதை செலுத்துவதற்காக மைதானத்திற்குள் வந்து நின்றனர்.
அப்போது, யாரும் எதிர்பார்க்காத வகையில், ஆஸ்திரேலியா அணியின் தேசிய கீதத்திற்கு பதிலாக இந்திய தேசிய கீதம் ஒலிபரப்பப்பட்டது. இதனால், ஆஸி., வீரர்கள் மட்டும் இன்றி, மைதானத்தில் இருந்த ரசிகர்களும் குழம்பி போயினர். பின்னர், தனது தவறை உணர்ந்த டி.ஜே., இந்திய தேசிய கீதத்தை பாதியில் நிறுத்தி விட்டு, ஆஸ்திரேலிய தேசிய கீதத்தை ஒலிபரப்பினார். இதனால், சிறிது நேரம் மைதானத்தில் பரபரப்பு நிலவியது.



