மார்ச் 3 முதல் மார்ச் 25 வரை பிளஸ் 2 மாணவர்களுக்கு அரசு பொது தேர்வு: தேர்வு மையங்கள் தயார்

மார்ச் 3 முதல் மார்ச் 25 வரை பிளஸ் 2 மாணவர்களுக்கு அரசு பொது தேர்வு நடக்க உள்ளது. இத்தேர்வினை அரசு, உதவி பெறும், தனியார், ஆதிதிராவிடர் நல பள்ளிகள் என 162 பள்ளிகளை சேர்ந்த 7,234 மாணவர், 8,829 மாணவிகள் என 16,063 பேர் எழுதுகின்றனர்.

174 பேர் தனி தேர்வர்களாக பங்கேற்கின்றனர். அதே போன்று பிளஸ் 1 தேர்வு மார்ச் 5ல் துவங்கி 27 ம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தேர்வினை 163 பள்ளிகளை சேர்ந்த 7,639 மாணவர், 8,953 மாணவிகள் என 16,592 பேர் எழுதுகின்றனர். 92 பேர் தனித்தேர்வர்களாக பங்கேற்கின்றனர். பிளஸ் 2, பிளஸ் 1 தேர்வு 83 தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது.

பத்தாம் வகுப்பு தேர்வு மார்ச் 28 முதல் ஏப்., 15ம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தேர்வினை 278 பள்ளிகளை சேர்ந்த 9,030 மாணவர், 8,904 மாணவிகள் என 17,934 பேர் 105 தேர்வு மையங்களில் எழுத உள்ளனர்.

250 பேர் தனித்தேர்வர்களாக பங்கேற்க உள்ளனர். ஒட்டு மொத்தமாக மார்ச் 3 முதல் ஏப்., 15 வரை நடக்கும் பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வினை 50 ஆயிரத்து 589 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர்.

தேர்வன்று கண்காணிப்பு பணிகளில் ஈடுபட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் மாவட்ட கல்வி அலுவலர், பறக்கும் படையினர் ஈடுபட உள்ளனர். மாணவர்கள் அரசு பொது தேர்வினை எளிதில் சந்திக்கும் விதமாக திருப்புதல் தேர்வு, சிறப்பு தேர்வு என தொடர்ந்து அனைத்து பள்ளிகளிலும் நடத்தி வருகின்றனர்.

Advertisement