ஊரக வேலை உறுதி திட்டத்தில் ரூ.14 கோடி முறைகேடு: ராமதாஸ் காட்டம்

சென்னை: தமிழகத்தில் ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ரூ.14 கோடி கையாடல் நடைபெற்றுள்ளது குறித்து தமிழக அரசு உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்று பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை;
தமிழகத்தில் 2024-25ம் ஆண்டில் ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை செயல்படுத்தியதில் 78 ஆயிரத்து 784 முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், அவற்றின் மூலம் ரூ.14 கோடிக்கும் கூடுதலான தொகை கையாடல் செய்யப்பட்டிருப்பதாகவும் சமூகத் தணிக்கை வாயிலாக தெரிய வந்துள்ளதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.
அப்பட்டமான முறைகேடுகள் நடந்திருப்பது தெரிய வந்திருக்கும் போதிலும், அவற்றின் மீது தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது. ஊரக வேலைத் திட்டத்தின் படி பணிக்கு வராதவர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டுள்ளது என்பது தான் முதன்மைக் குற்றச்சாட்டு ஆகும்.
லட்சக்கணக்கானோருக்கு அவர்கள் செய்த பணியின் அளவு அதிகரித்து காட்டப்பட்டு, பணம் வழங்கப்பட்டதாகக் கணக்குக் காட்டி சுருட்டப்பட்டிருக்கிறது. சிவகங்கை மாவட்டத்தில் கஞ்சிரங்கால் ஊராட்சியில் மட்டும் எந்த வேலையும் செய்யாத 37 பேருக்கு மொத்தம் ரூ.8.25 லட்சம், அதாவது சராசரியாக ஒருவருக்கு ரூ.22,297 வீதம் வழங்கி மோசடி செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம், விருதுநகர், திருவள்ளூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இத்தகைய மோசடிகள் நடைபெற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் நடைபெற்ற மோசடிகள் குறித்த அனைத்து விவரங்களும் தமிழக அரசிடம் உள்ளன. ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் முறைகேடுகள் இல்லாமல் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்யத் தான் சமூகத் தணிக்கை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அதில் தெரிய வரும் முறைகேடுகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது அரசின் கடமை. ஆனால், தமிழக அரசு இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்காததன் மூலம் முறைகேடுகளில் ஈடுபட்டவர்களை பாதுகாக்க முயல்கிறது என்பது உறுதியாகி உள்ளது.
தமிழகத்தில் நடந்த முறைகேடுகளில் 6302 புகார்கள் மீது மட்டும் தான் தமிழக அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது. மோசடி செய்யப்பட்ட பணத்தில் ரூ.1.89 கோடி மட்டுமே மீட்கப்பட்டுள்ளது. இந்த மோசடிகளை செய்த பணியாளர்கள், அதிகாரிகள் மீது இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவர்கள் தான் இப்போதும் ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை களத்தில் செய்ல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதால் முறைகேடுகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
முறைகேடுகள் குறித்து தமிழக அரசு உடனடியாக விசாரணை நடத்த வேண்டும். இந்த மோசடியில் சம்பந்தப்பட்ட அனைவர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.




மேலும்
-
கார் ரேஸில் மீண்டும் விபத்து; அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய அஜித்
-
பிரேசிலில் நிலச்சரிவால் அழியும் நகரம்
-
பிரதமர் மோடியும், டிரம்ப்பும் தேசியவாதிகள்; அமைச்சர் ஜெய்சங்கர்
-
ஜெர்மனிக்கு பதிலடி கொடுத்தது இந்தியா: புரோ லீக் ஹாக்கியில்
-
உலக தடகளம்: குல்வீர் தகுதி
-
அடுத்த ஜேம்ஸ்பாண்ட் நடிகர் யார்: அமேஸான் அதிபர் கையில் முடிவு!