இந்தியாவுக்கு ஐந்து தங்கம் * ஆசிய வில்வித்தையில்...

பாங்காக்: ஆசிய கோப்பை வில்வித்தையில் ஐந்து தங்கம் உட்பட 8 பதக்கம் வென்ற இந்தியா, முதலிடம் பிடித்தது.
தாய்லாந்தில் ஆசிய கோப்பை வில்வித்தை 'ரேங்கிங்' தொடர் (21 வயதுக்குட்பட்ட) நடந்தது. தனிநபர் ரிகர்வ் பிரிவு பைனலில் இந்திய வீராங்கனை பசந்தி, சீனதேபேவின் யு பாங் மோதினர். முதல் இரு செட்டை இழந்து 0-4 என பின்தங்கிய பசந்தி, பின் எழுச்சி பெற்று அடுத்த 3 செட்டையும் வென்றார். முடிவில் 6-4 என வென்று தங்கம் கைப்பற்றினார்.
ரிகர்வ் ஆண்கள் தனிநபர் பைனலில் இந்தியாவின் விஷ்ணு சவுத்ரி, 6-2 என சக வீரர் ராகுலை வீழ்த்தி, தங்கம் வென்றார்.
ரிகர்வ் ஆண்கள் அணிகளுக்கான பைனலில் விஷ்ணு, கோல்டி, ராகுல் ஜோடி, 6-1 என சீனாவை வென்று, தங்கம் கைப்பற்றியது.
ஆண்களுக்கான காம்பவுண்டு அணிகள் பைனலில் இந்தியாவின் குஷால் தலால், கணேஷ் மணிரத்னம், மானவ் கணேஷ்ராவ் கூட்டணி, 237-233 என மலேசியாவை சாய்த்து, தங்கப்பதக்கம் கைப்பற்றியது.
காம்பவுண்டு தனிநபர் பைனலில் இந்திய வீரர் குஷால் தலால், 148-144 என தென் கொரியாவின் சோயை சாய்த்து தங்கம் வசப்படுத்தினார். ஒட்டுமொத்தமாக இந்தியா 5 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம் என மொத்தம் 8 பதக்கம் வென்று பட்டியலில் முதலிடம் பிடித்தது.

Advertisement