மேல்நிலைப்பள்ளி மாணவர் 80% பேருக்கு தமிழையே சரியாக படிக்க தெரியவில்லை: சொல்கிறார் ஆசிரியர் சங்க தலைவர்

''தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மேல்நிலைப்பள்ளி படிக்கும் 80 சதவீத மாணவ - மாணவியருக்கு தமிழையே முறையாக எழுதப் படிக்கத் தெரியவில்லை,'' என்று, புதுக்கோட்டையில் தமிழக மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில சிறப்பு தலைவர் மணிவாசகன் தெரிவித்தார்.
செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: தமிழக அரசு பள்ளிகளில் மேல்நிலை கல்வி படிக்கும் 80 சதவீத மாணவ - மாணவியருக்கு தமிழ் முறையாக எழுதத் தெரியவில்லை என்பது தான் எதார்த்தமான உண்மை. தமிழகத்தில் கடந்த காலங்களில் தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகள் இருந்தாலும், விருப்ப பாடமாக ஒன்று இருந்தது; இடையில் அது கைவிடப்பட்டது. விருப்ப பாடம் மீண்டும் கொண்டு வரப்பட்டால், அது மாணவர்களை பாதிக்கக்கூடிய அளவிற்கு இருக்கக்கூடாது.
தற்போது உள்ள சூழ்நிலையில் மாணவர்களுக்கு மூன்றாவது மொழி கொண்டு வந்தால், அவர்கள் படிப்பது மிகவும் சிரமம். தமிழ் மொழி சார்ந்து எந்த ஒரு நடவடிக்கையும் பள்ளிகளில் இல்லை என்பதால் தான், மாணவர்களுக்கு தமிழில் எழுதக் கூட முடியாத சூழ்நிலை உள்ளது.
ஆசிரியர்கள் மீது பாயும், 'போக்சோ' சட்டத்தில் 10 வழக்குகள் இருந்தால், ஒன்பது வழக்குகள் பொய் வழக்குகளாக தான் உள்ளன. தண்டனை கொடுக்க முடியாத சூழ்நிலையில் தான் நீதிமன்றம் உள்ளது.
ஆசிரியர்கள் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்படும் போது, தண்டனை பெற்றால் மட்டுமே அவரை தகுதி நீக்கம் செய்ய முடியும். அரசியலுக்காக வேண்டுமானால் அமைச்சர்கள் பணி நீக்கம் செய்யப்படுவர் என்றும், ஆசிரியர் பணி வேறு எங்கும் செய்ய முடியாத அவருடைய கல்வித் தகுதி ரத்து செய்யப்படும் என்றும் கூறலாம்.
ஆனால், ஆசிரியர் விதிப்படி, அவ்வாறு செய்ய முடியாது. மொத்தமே 210 நாட்கள் பள்ளிகள் இயங்கக்கூடிய சூழ்நிலையில், அதில் 10 தினங்கள் கலை விழா என்ற பெயரில் மாணவர்களின் படிப்பு வீணாகிறது.
எதிர்க்கட்சித் தலைவராக இன்றைய முதல்வர் இருந்தபோது, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்தார். ஆனால், அவர் ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் ஆகியும், இதுநாள் வரை ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை.
மாணவர்களுக்கு தேர்வு வருவதற்கு இன்னும் குறுகிய காலமே இருப்பதால், ஆசிரியர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். களப் போராட்டத்திற்கு ஆசிரியர்களை அரசு தள்ளி, மாணவர்களை வஞ்சிக்கக்கூடாது. இவ்வாறு மணிவாசகன் தெரிவித்தார்.
- நமது நிருபர் -










மேலும்
-
ரயில் நிலையங்களில் அத்துமீறல்; தி.மு.க.,வினர் மீது வழக்கு
-
அரசு ஊழியர் சங்கங்களின் கோரிக்கை என்ன? நாளை கேட்கிறது அமைச்சர்கள் குழு
-
மணமக்கள் பெயரைப் பார்த்தால் சங்கடம்: திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு!
-
போலீஸ் வாகனங்கள் உடைப்பு; சென்னையில் ஒருவர் கைது
-
கந்தர்வகோட்டையில் குடிநீர் விநியோகிப்பாளர் தலையில் கல்லைப் போட்டுக் கொலை .
-
பெண்கள் சக்தி நாட்டை வலுப்படுத்தும்; மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு