இந்தியாவை சமாளிக்குமா பாகிஸ்தான்: சாம்பியன்ஸ் டிராபியில் 'விறுவிறு'

துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடரின் பரபரப்பான லீக் போட்டியில் இன்று இந்தியா, பாகிஸ்தான் மோதுகின்றன. இதில் இந்தியா வென்று, அரையிறுதிக்கு முன்னேற காத்திருக்கிறது.
பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாய் சர்வதேச மைதானத்தில் நடக்கின்றன. இன்று நடக்கும் 'ஏ' பிரிவு லீக் போட்டியில் (பகலிரவு) இந்திய அணி, பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
'பேட்டிங்' பலம்: இந்திய அணி, வங்கதேசத்தை வென்ற உற்சாகத்தில் களமிறங்குகிறது. இப்போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா (41), சுப்மன் கில் (101) வலுவான துவக்கம் தந்தனர். இவர்களது விளாசல் தொடரலாம். 'மிடில் ஆர்டரில்' கோலி, ஸ்ரேயாஸ் எழுச்சி காண வேண்டும். 5வது இடத்தில் வரும் அக்சர் படேல் நம்பிக்கை தருகிறார். ராகுல், 'ஆல்-ரவுண்டர்' ஹர்திக் பாண்ட்யா, ரவிந்திர ஜடேஜா இருப்பதால், பேட்டிங் படை பலமாக உள்ளது.
'புயலாக' ஷமி: வேகப்பந்துவீச்சில் முகமது ஷமி, ஹர்ஷித் ராணா அசத்துகின்றனர். வங்கதேசத்திற்கு எதிராக 5 விக்கெட் சாய்த்த ஷமி, மீண்டும் மிரட்டலாம். 'சுழல்' ஜாலத்திற்கு அக்சர், குல்தீப், ஜடேஜா உள்ளனர். வெற்றி கூட்டணியில் மாற்றம் செய்ய வாய்ப்பு குறைவு என்பதால், வருண் சக்ரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர் இடம் பெறுவது கடினம். இந்திய அணி அனைத்து விதத்திலும் வலுவாக இருப்பதால், இன்று வெற்றி பெற்று அரையிறுதியை உறுதி செய்யலாம்.
சோதனையில் பாக்.,: 'நடப்பு சாம்பியன்' பாகிஸ்தான் அணி முதல் போட்டியில் நியூசிலாந்திடம் தோற்றதால், இக்கட்டான நிலையில் உள்ளது. இன்று சோபிக்க தவறினால், தொடரில் இருந்து வெளியேற நேரிடும். கடந்த 2017ல் நடந்த சாம்பியன்ஸ் டிராபி பைனலில் இந்தியாவை வீழ்த்தி, கோப்பை வென்றது நம்பிக்கை தரலாம்.
கேப்டன் ரிஸ்வான் தடுமாறுவது, பகர் ஜமான் காயத்தால் விலகியது பின்னடைவு. அனுபவ பாபர் ஆசம் மந்தமாக ஆடுகிறார். நியூசிலாந்துக்கு எதிராக, 90 பந்தில் 64 ரன் (ஸ்டிரைக் ரேட் 71.11) தான் எடுத்தார். கடந்த போட்டியில் குஷ்தில் ஷா 49 பந்தில் 69 ரன் விளாசினார். இவரது அதிரடி ஆட்டம் அணிக்கு பலம். 'மிடில் ஆர்டரில்' சல்மான் அகா கைகொடுக்கலாம்.
எடுபடாத 'வேகம்': ஷாகீன் ஷா அப்ரிதி, நசீம் ஷாவின் வேகப்பந்துவீச்சு எடுபடவில்லை. கடந்த போட்டியில் ரன்களை வாரி வழங்கினர். ஹாரிஸ் ராப், 'ஸ்பின்னர்' அப்ரார் அகமது கட்டுக்கோப்பாக பந்துவீசுவது பலம்.
மழை வருமா
துபாயில் மழைக்கு வாய்ப்பு இல்லை.
* இங்குள்ள சர்வதேச மைதானத்தின் ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும். துவக்கத்தில் 'வேகம்', போகப் போக 'ஸ்பின்னர்'கள் சாதிக்கலாம். பெரிய ஸ்கோர் எட்டுவது கடினம்.
14,000 ரன் நோக்கி...
ஒருநாள் அரங்கில் 14,000 ரன்னை எட்டிய மூன்றாவது வீரராக காத்திருக்கிறார் கோலி. இதற்கு இன்னும் 15 ரன் தேவை. 298 போட்டியில் 13,985 ரன் எடுத்துள்ளார். முதல் இரு இடங்களில் சச்சின் (463 போட்டி, 18,426 ரன்), சங்ககரா (இலங்கை, 404 போட்டி, 14,234 ரன்) உள்ளனர்.
இதுவரை
சர்வதேச ஒருநாள் போட்டி அரங்கில் இரு அணிகளும் 135 முறை மோதி உள்ளன. இதில் இந்தியா 57, பாகிஸ்தான் 73ல் வெற்றி பெற்றன. ஐந்து போட்டிகளுக்கு முடிவு இல்லை.
உலக கோப்பையில்...
ஐ.சி.சி., உலக கோப்பை (50 ஓவர்) தொடரில் இரு அணிகளும் 8 முறை (1992, 1996, 1999, 2003, 2011, 2015, 2019, 2023) மோதின. இதில் அனைத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்துகிறது.
* 'டி---20' உலக கோப்பை அரங்கில் இவ்விரு அணிகள் 8 முறை மோதின. இதில் இந்தியா 6 (2007, 2012, 2014, 2016, 2022, 2024), பாகிஸ்தான் ஒரு போட்டியில் (2016) வென்றன. ஒரு போட்டி (2007) 'டை' ஆனது. இதில் 'பவுல் அவுட்' முறையில் இந்தியா வெற்றி பெற்றது.
சாம்பியன்ஸ் டிராபியில்...
சாம்பியன்ஸ் டிராபியில் இவ்விரு அணிகள் 5 முறை விளையாடின. இதில் இந்தியா 2 (2013, 2017), பாகிஸ்தான் 3ல் (2004, 2009, 2017) வென்றன.
மைதான ராசி எப்படி
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மூன்றாவது முறையாக ஒருநாள் போட்டியில் மோத உள்ளன. இங்கு பாகிஸ்தானுக்கு எதிராக ஏற்கனவே விளையாடிய 2 போட்டியிலும் (2018, ஆசிய கோப்பை) இந்தியா வென்றது.
* துபாய் மைதானத்தில் இந்திய அணி இதுவரை 7 ஒருநாள் போட்டியில் விளையாடியது. இதில் இந்தியா 6ல் வெற்றி (2018ல் எதிர்: வங்கம் 2, பாக்., 2, ஹாங்காங் 1, 2025ல் எதிர்: வங்கம் 1 போட்டி) பெற்றது. ஒரு போட்டி (எதிர்: ஆப்கன், 2018) 'டை' ஆனது.
* ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மைதானங்களில் (துபாய், சார்ஜா, அபுதாபி) இவ்விரு அணிகள் 28 ஒருநாள் போட்டியில் மோதின. இதில் இந்தியா 9, பாகிஸ்தான் 19ல் வெற்றி பெற்றன.
எகிறும் 'டென்ஷன்'
உலக கோப்பை அரங்கில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டிகளில் நடந்த சில 'டென்ஷன்' தருணங்கள்:
* 1992, மார்ச் 4ல் இந்திய அணி விக்கெட் கீப்பராக இருந்தார் கிரண் மோரே. பாகிஸ்தான் அணியின் மியான்தத் பேட்டிங் செய்த போது ஒவ்வொரு முறையும் தவளை போல எகிறிக்குதித்து 'அவுட்' கேட்டார். இதற்காக மோரேயுடன் மோதலில் ஈடுபட்டார் மியான்தத். பின் ரன் அவுட் வாய்ப்பில் இருந்து தப்பியதும், கிரண் மோரே போல மூன்று முறை குறித்து ரசிகர்களை சூடேற்றினார்.
* 1996ல் பெங்களூருவில் நடந்த காலிறுதியில் இந்தியா-பாகிஸ்தான் மோதின. இந்திய அணியின் இலக்கைத் துரத்திய (287/8) பாகிஸ்தான் அணிக்கு அமீர் சோகைல், சயீத் அன்வர் ஜோடி நல்ல துவக்கம் தந்நது. தனது பந்தில் பவுண்டரி அடித்த சோகைலை வெறுப்புடன் பார்த்தார் வெங்கடேஷ் பிரசாத். அதற்கு சோகைல், என்னைப் பார்க்கார்காதே, பந்தை பார் என்றார். இதற்கு அடுத்த பந்தில் சோகைல் போல்டானார். இதனால் கோபமாக பார்த்த சோகைலை வெளியே போ என தன் பங்கிற்கு 'சைகை' காண்பித்து அதிர வைத்தார் வெங்கடேஷ் பிரசாத்.
* 2003ல் பாகிஸ்தான் அணி 'வேகப்புயல்' சோயப் அக்தரை நம்பி களமிறங்கியது. இந்தியாவின் சச்சின், அக்தர் வீசிய முதல் ஓவரில் ஒரு சிக்சர், 2 பவுண்டரி அடித்து அசத்தினார். இதன் பின் சிறிது நேரம் அவர் பந்துவீவே இல்லை.
டிராவிட் '143'
சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தானுக்கு எதிராக அதிக ரன் குவித்த இந்திய வீரர்கள் வரிசையில் ராகுல் டிராவிட் முதலிடத்தில் உள்ளார். இவர், 2 போட்டியில், 2 அரைசதம் உட்பட 143 ரன் எடுத்துள்ளார். அடுத்த மூன்று இடங்களில் ஷிகர் தவான் (137 ரன், 3 போட்டி), விராத் கோலி (124 ரன், 4 போட்டி), கேப்டன் ரோகித் சர்மா (109 ரன், 3 போட்டி) உள்ளனர்.
நெஹ்ரா '5'
சாம்பியன்ஸ் டிராபி அரங்கில் பாகிஸ்தானுக்கு எதிராக அதிக விக்கெட் கைப்பற்றிய இந்திய பவுலர்கள் பட்டியலில் ஆஷிஸ் நெஹ்ரா முன்னிலை வகிக்கிறார். இவர், 2 போட்டியில், 5 விக்கெட் சாய்த்துள்ளார். அடுத்த மூன்று இடங்களில் இஷாந்த் சர்மா, புவனேஷ்வர் குமார், ரவிந்திர ஜடேஜா (தலா 4 விக்கெட்) உள்ளனர்.
ஹர்திக் '9'
சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தானுக்கு எதிராக அதிக சிக்சர் பறக்கவிட்ட இந்திய வீரர்களில் ஹர்திக் பாண்ட்யா முதலிடத்தில் உள்ளார். இவர், 2 போட்டியில், 9 சிக்சர் விளாசினார். அடுத்த நான்கு இடங்களில் கோலி (3 சிக்சர்), காம்பிர், ரெய்னா, ரோகித் (தலா 2) உள்ளனர்.
இது அதிகம்
பர்மிங்காமில், 2017ல் நடந்த போட்டியில் இந்திய அணி 319/3 ரன் குவித்தது. இது, சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணியின் அதிகபட்ச ஸ்கோரானது. இதற்கு முன், 248 ரன் (2009, செஞ்சுரியன்) எடுத்திருந்தது.
158 ரன்
கடந்த 2017ல் லண்டன், ஓவல் மைதானத்தில் நடந்த போட்டியில் 158 ரன்னுக்கு சுருண்டது, சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவின் குறைந்தபட்ச ஸ்கோரானது. இதற்கு முன், 200 ரன்னுக்கு (2004, பர்மிங்காம்) 'ஆல்-அவுட்' ஆனது.
மேலும்
-
வீட்டுக்கு வீடு குக்கர், தவா; ஓட்டு வேட்டைக்கு தயாராகுது தி.மு.க.,
-
48/ 52 - தமிழக மின் பகிர்மான தரம் இது! 'சி மைனஸ் கிரேடு'க்கு இறங்கியது ஏன்?
-
தமிழகத்துக்கு மும்மொழி தேவைதான்; வெளிநாட்டு தமிழறிஞர்கள் கருத்து
-
மேல்நிலைப்பள்ளி மாணவர் 80% பேருக்கு தமிழையே சரியாக படிக்க தெரியவில்லை: சொல்கிறார் ஆசிரியர் சங்க தலைவர்
-
ஊழல் திட்டமாக மாறி வரும் 100 நாள் வேலை திட்டம் ராமதாஸ் குற்றச்சாட்டு
-
'முருகன் வழியில் மும்மொழிக்கு ஆதரவு தெரிவியுங்கள்'