ஆஸ்திரேலியா சாதனை வெற்றி * இங்லிஸ் சதம் விளாசி அசத்தல்

லாகூர்: சாம்பியன்ஸ் டிராபி அரங்கில் சாதனை வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா. நேற்று நடந்த லீக் போட்டியில் இங்லிஸ் சதம் கைகொடுக்க, 5 விக்கெட்டில் இங்கிலாந்தை வீழ்த்தியது. டக்கெட் சதம் வீணானது.
ஐ.சி.சி., சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடக்கிறது. நேற்று லாகூரில் நடந்த போட்டியில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற ஆஸ்திரேலியா பீல்டிங் தேர்வு செய்தது.
திணறல் துவக்கம்
இங்கிலாந்து அணிக்கு பில் சால்ட், டக்கெட் ஜோடி துவக்கம் தந்தது. ஸ்பென்சர் வீசிய முதல் ஓவரில் சால்ட் 4, 6 என விளாசினார். வார்ஷுய்ஸ் பந்துகளில் சால்ட் (10), ஜமை ஸ்மித் (15) வெளியேறினர். டக்கெட், ஜோ ரூட் அரைசதம் கடந்தனர். மூன்றாவது விக்கெட்டுக்கு 158 ரன் சேர்த்த போது, ஜாம்பா சுழலில் ஜோ ரூட் (68) சிக்கினார்.
டக்கெட் சதம்
டக்கெட், ஒருநாள் அரங்கில் 3வது சதம் கடந்தார். ஹாரி புரூக் 3, கேப்டன் பட்லர் 23 ரன் எடுத்தனர். இதன் பின் லிவிங்ஸ்டன் (14) அவுட்டாக, அடுத்த சில நிமிடத்தில் டக்கெட் (165 ரன், 143 பந்து) அவுட்டாக, ஸ்கோர் வேகம் குறைந்தது. கார்ஸ் (8) ஏமாற்ற, கடைசி 3 பந்தில் 4, 6, 2 என 12 ரன் எடுத்தார் ஆர்ச்சர். இங்கிலாந்து அணி 50 ஓவரில் 351/8 ரன் எடுத்தது. ஆர்ச்சர் (21), ரஷித் (1) அவுட்டாகாமல் இருந்தனர்.
ஹெட் ஏமாற்றம்
கடின இலக்கைத் துரத்திய ஆஸ்திரேலிய அணி துவக்கத்தில் தடுமாறியது. ஹெட் 6 ரன்னுக்கு அவுட்டானார். கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 5 ரன்னில் வெளியேறினார். ஷார்ட், லபுசேன் இணைந்து அணியை மீட்க உதவினர். 3வது விக்கெட்டுக்கு 95 ரன் சேர்த்த போது, அடில் ரஷித் சுழலில் லபுசேன் (47) சிக்கினார்.
இங்லிஸ் அபாரம்
மறுபக்கம் ஷார்ட் (63) அரைசதம் எட்டினார். 49 ரன்னில் கேரி கொடுத்த, 'கேட்ச்சை' ஆர்ச்சர் நழுவவிட, இங்கிலாந்தின் வெற்றியும் கைநழுவியது. வாய்ப்பை பயன்படுத்திய கேரி (69), அரைசதம் அடித்தார். இந்த ஜோடி 5வது விக்கெட்டுக்கு 146 ரன் சேர்த்து கைகொடுத்தது.
ஆர்ச்சர் பந்தில் சிக்சர் அடித்த இங்லிஸ், 77 வது பந்தில் ஒருநாள் அரங்கில் முதல் சதம் கடந்தார். இவருக்கு மேக்ஸ்வெல் 'கம்பெனி' கொடுக்க, வெற்றி எளிதானது. ஆஸ்திரேலிய அணி 47.3 ஓவரில் 356/5 ரன் எடுத்து வெற்றி பெற்றது. இங்லிஸ் (120), மேக்ஸ்வெல் (32) அவுட்டாகாமல் இருந்தனர்.

பாகிஸ்தானில் ஜன கன மன...
நேற்று போட்டி துவங்கும் முன், ஆஸ்திரேலிய தேசிய கீதத்திற்கு பதில் இந்தியாவின் தேசிய கீதமான 'ஜன கன மன..' இசைக்கப்பட்டது. இதைக் கேட்ட வீரர்கள் குழப்பம் அடைந்தனர். 3 விநாடிக்குப் பின் நிறுத்தப்பட்டது. பின் ஆஸ்திரேலிய தேசிய கீதம் துவங்கியது.
இதுகுறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம், பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு விளக்கம் கேட்டுள்ளது. இதில்,' இந்திய அணி, பாகிஸ்தானில் விளையாடவில்லை. அவர்களது தேசிய கீதம் மட்டும் எப்படி இங்கு இசைக்கப்பட்டது. இதை புரிந்து கொள்ளவே முடியவில்லை. ஐ.சி.சி., விளக்கம் தர வேண்டும்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

165 ரன்
சாம்பியன்ஸ் டிராபி அரங்கில் ஒரு போட்டியில் அதிக ரன் எடுத்த வீரர் ஆனார் டக்கெட் (165 ரன்). இதற்கு முன் 2004ல் நாதன் ஆஷ்லே 145 ரன் எடுத்ததே (அமெரிக்கா) அதிகம்.
* இங்கிலாந்து வீரர்களில் டக்கெட் (165), ஜோ ரூட் (133, வங்கதேசம், 2017), டிரஸ்கோதிக் (119, ஜிம்பாப்வே, 2002) 'டாப்-3' ஆக உள்ளனர்.

ஜாம்பா '300'
நேற்று 2 விக்கெட் சாய்த்த ஆஸ்திரேலியாவின் ஜாம்பா, சர்வதேச அரங்கில் 300 விக்கெட் என்ற மைல்கல்லை எட்டினார். இவர், ஒருநாள் அரங்கில் 183 (109 போட்டி), 'டி-20'ல் 117 (95) விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

351/8
இங்கிலாந்து அணி நேற்று 50 ஓவரில் 351/8 ரன் குவித்தது. சாம்பியன்ஸ் டிராபியில் ஒரு போட்டியில் எடுக்கப்பட்ட அதிக ஸ்கோராக இது அமைந்தது. முன்னதாக 2004ல் நியூசிலாந்து அணி 347/4 (எதிர்-அமெரிக்கா) எடுத்திருந்தது.

சிறந்த 'சேஸ்'
சாம்பியன்ஸ் டிராபி அரங்கில் அதிக ரன்னை 'சேஸ்' செய்து சாதனை படைத்தது ஆஸ்திரேலியா. நேற்று 356/5 ரன் எடுத்து வெற்றி பெற்றது. முன்னதாக 2017ல் இந்திய அணி (321/6) இலக்கை துரத்திய இலங்கை அணி 322/3 ரன் எடுத்து வெற்றி பெற்றதே அதிகம்.
* ஐ.சி.சி., ஒருநாள் தொடரில் (உலக கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி) இது சிறந்த சேஸ் ஆனது.
* இங்கிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலிய அணியில் சிறந்த சேஸ் ஆக அமைந்தது. இதற்கு முன் சிட்னியில் (2011), ஆஸ்திரேலியா 334/8 ரன் எடுத்து வென்றிருந்தது.

356/5
சாம்பியன்ஸ் டிராபியில் ஒரு போட்டியில் அதிக ரன் எடுத்த அணி என சாதித்தது இங்கிலாந்து (351/8). முன்னதாக 2004ல் நியூசிலாந்து அணி 347/4 (எதிர்-அமெரிக்கா) எடுத்திருந்தது.
* அடுத்த சில மணி நேரத்தில் இங்கிலாந்தை முந்திய ஆஸ்திரேலியா (356/5), அதிக ரன் எடுத்த அணி என புதிய சாதனை படைத்தது.

2009க்குப் பின்...
சாம்பியன்ஸ் டிராபியில் 2009 அரையிறுதியில் இங்கிலாந்தை வென்றது ஆஸ்திரேலியா. இதன் பின் இத்தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக பெற்ற முதல் வெற்றி இதுவானது.

Advertisement