வவ்வாலிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் புது வைரஸ்!: சீனாவில் பாதிப்பை ஏற்படுத்துவதால் பீதி

1

பீஜிங்: உலக நாடுகளிடையே கொரோனா பெருந்தொற்று பெரும் அச்சத்தை ஏற்படுத்திய நிலையில், 'ஹெச்.கே.யு., 5' என்ற வைரஸ், சீனாவில் வவ்வால்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவுவது கண்டுபிடிக்கப்பட்டு, மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

நம் அண்டை நாடான சீனாவில், 2019ம் ஆண்டு இறுதியில் கொரோனா பெருந்தொற்றுக்கான 'சார்ஸ் - கோவி - 2' என்ற வைரஸ் பரவல் கண்டுபிடிக்கப்பட்டது. விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு பரவிய இந்த வைரஸ், இந்தியா உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியது. அடுத்த இரண்டு ஆண்டுகளில், கொரோனா பெருந்தொற்றுக்கு உலகம் முழுதும் லட்சக்கணக்கானோர் பலியாகினர். ஊரடங்கு உத்தரவு, தடுப்பூசிகள் போன்றவற்றின் வாயிலாக கொரோனா பரவல் பெருமளவு தடுக்கப்பட்டது. இருப்பினும், கொரோனா வைரசின் திரிபு வகைகள் பரவி அவ்வப்போது அச்சத்தை அளித்து வருகின்றன.

இந்நிலையில், 'ஹெச்.கே.யு., 5' என்ற புதிய வைரஸ் சீனாவில் பரவி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொரோனாவின்போது அறியப்பட்ட வைரஸ் போலவே இந்த வைரசும் விலங்குகளில் இருந்து மனிதனுக்கு பரவுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் வைரஸ் குறித்து ஆராய்ச்சி செய்து, 'பேட் வுமன்' அதாவது 'வவ்வால் பெண்' என அழைக்கப்படும் பிரபல வைராலஜிஸ்ட் ஷி ஷெங்லி தலைமையிலான நிபுணர்கள் குழு, ஹெச்.கே.யு., 5 வைரசை கண்டறிந்துள்ளது. வூஹான் பல்கலை மற்றும் வூஹான் நச்சு உயிரியல் மையத்தின் கீழ் இயங்கும் ஆங் சூ ஆய்வகம் மற்றும் ஆங் சூ அறிவியல் மைய ஆராய்ச்சியாளர்கள் புதிய வைரஸ் பரவுவதை உறுதி செய்துள்ளனர்.

அமெரிக்காவின் மினசோட்டா பல்கலை தொற்றுநோய் மருத்துவ நிபுணர் டாக்டர் மைக்கேல் ஆஸ்டர்ஹோம் கூறுகையில், ''புதிய வைரஸ் குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம். இது போன்ற சார்ஸ் வகை வைரஸ்களை எதிர்கொள்ள மனித உடலில் தேவையான எதிர்ப்பு சக்திகள் உள்ளன. இந்த நோய் எதிர்ப்பு சக்தி, புதிய வைரசுக்கு எதிராகவும் செயல்படும். மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் திறன் இந்த வைரசில் குறைவாகவே இருப்பது ஆராய்ச்சி வாயிலாக தெரியவந்துள்ளது. அப்படியே பரவினாலும், அதிகளவில் ஆபத்தை ஏற்படுத்தாது,'' என, தெரிவித்துள்ளார்.

உலக நாடுகளை பொருளாதார ரீதியாகவும், சுகாதார வாயிலாகவும் மிகப்பெரிய அளவில் அச்சுறுத்திய கொரோனா தொற்று எங்கு தோன்றியது என்ற ஆராய்ச்சி இன்னும் தொடரும் சூழலில், ஹெச்.கே.யு., 5 தொற்று, இனம்புரியாத அச்சத்தை மனிதர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

என்ன பாதிப்பு ஏற்படும்?

ஜப்பான் மற்றும் சீனாவில் வாழும் 'பைபிஸ்ட்ரெல்' வகை வவ்வால்களில் இருந்து, இந்த வைரஸ் பரவுவது ஆராய்ச்சியாளர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்றை போல் சுவாச மண்டலத்தை பாதிக்கும் தன்மை கொண்டுள்ளதாகவும், 'ஏஸ்' 2 வகை ரத்த அழுத்தத்தை இந்த புதிய வைரஸ் ஏற்படுத்தும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தாவிட்டால் மேலும் பலருக்கு, அது பரவ வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இருப்பினும், கொரோனா பெருந்தொற்று போல், இது மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தாது என ஆராய்ச்சியாளர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.

Advertisement