போலீஸ் அறை தீப்பிடித்து சேதம்

திருச்சி:திருச்சி, நம்பர் ஒன் டோல்கேட் அருகே, போலீசாரின் கண்காணிப்பு அறை தீப்பற்றி எரிந்ததால், மின் சாதன பொருட்கள் எரிந்து சேதமாகின.

திருச்சி மாவட்டம், நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில், திருச்சி, சென்னை, சேலம், அரியலுார் நகரங்களுக்கு செல்லும் பிரதான சாலைகள் இணைகின்றன. இங்குள்ள ரவுண்டானா பகுதியில், வாகன விபத்துகள் மற்றும் குற்ற சம்பவங்களை கண்காணிப்பதற்காக, போலீசார் 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தி உள்ளனர்.

நேற்று அதிகாலை, சிசிடிவி கேமரா கண்காணிப்பு அறையில், திடீரென தீப்பற்றி எரிய துவங்கியது. ரவுண்டானா பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், தீயை அணைக்க முயன்றனர்.

இருப்பினும், கண்காணிப்பு அறையில் பொருத்தி இருந்த எல்.இ.டி., 'டிவி' மற்றும் சிசிடிவி கேமரா சாதனங்கள் உட்பட மின்சாதன பொருட்கள் தீயில் கருகின. கண்காணிப்பு அறையில் இருந்த மின் சாதனங்களில் மின் கசிவு ஏற்பட்டு, தீ பற்றியதாக போலீசார் தெரிவித்தனர்.

Advertisement