விவசாய செலவை குறைக்க மின் டிராக்டர்

முன்னாள் 'வோல்வோ' நிர்வாகிகள் பெங்களூருவை சேர்ந்த அனுாப் ஸ்ரீகாந்தசுவாமி, ரவி குல்கர்னி ஆகியோர் 'மூன்ரைடர்' என்ற ஸ்டார்ட் அப் மூலம், விவசாய செலவுகளைக் குறைக்கவும், செயல்திறனை மேம்படுத்தவும் கனரக மின் டிராக்டர்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தினர்.

ஒரு நண்பரைச் சந்திக்க, இருவரும், அவரது பண்ணைக்கு சென்றனர். 'பண்ணைக்கு இலவசமாக மின்சாரம் கிடைக்கிறது. சாலைகளில் மின் வாகனங்கள் அதிகமாக ஓடுகின்றன; ஆனால், மின் டிராக்டர் மட்டும் ஏன் இல்லை'' என்று கேள்வி எழுப்பினார் நண்பர். இதுதான் 'ஸ்டார்ட் அப்' துவங்குவதற்கான விதையாக அமைந்தது.

செயல்திறன், மலிவு விலை



2023ல் நிறுவப்பட்ட இந்த 'ஸ்டார்ட் அப்', உலகின் முதல் எண்ணெய்- குளிரூட்டப்பட்ட வெப்ப தீர்வைக் கொண்ட இரண்டு மின் டிராக்டர்களை உருவாக்கியுள்ளது. அவை ஹைபோர்ஸ் 50 எச்.பி.,; மேக்ஸ்போர்ஸ் 75 எச்.பி., என அழைக்கப்படுகிறது. 75 எச்.பி., மின் டிராக்டர் எனில் மணிக்கு 300 ரூபாய் மட்டுமே செலவாகும்.

வோல்வோ, ஓலா எலக்ட்ரிக், ஓலெக்ட்ரா போன்ற நிறுவனங்களில் வாகனப் பொறியியல் மற்றும் மின் வாகன ஆராய்ச்சி மேம்பாட்டில் 30 ஆண்டுக்கும் மேலான அனுபவத்தை கொண்டு டிராக்டர்கள் உருவாக்கப்பட்டுள்ளன. செயல்திறன், மலிவு விலை மற்றும் நிலைத்தன்மை மேம்பாட்டுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இயக்கச் செலவு குறையும்



''மின் டிராக்டர்கள் நவீன விவசாயிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வது மட்டுமல்லாமல், இயக்க செலவை 75 சதவீத அளவுக்கு குறைக்கும்; விலையும் சாதாரண டிராக்டர் விலையளவுதான் இருக்கும்'' என்கின்றனர் 'ஸ்டார்ட் அப்' நிறுவனத்தினர்.

மேலும் கார்பன் உமிழ்வு பாதிப்பை குறைக்கும்.வெளிநாடுகளிலும் தங்கள் டிராக்டரை விற்க தொடங்கியுள்ளனர். ஆப்ரிக்காவில் தங்கள் முதல் டிராக்டரை விற்றுள்ளனர்.

'மூன்ரைடர்' டிராக்டர்கள், மிகுந்த சவாலான சூழல்களில் நீண்ட நேரம் வேலை செய்ய வடிவமைக்கப்பட்ட அதிநவீன பேட்டரி தொழில்நுட்பத்துடன் கட்டமைக்கப்பட்டுள்ளன; வயல்களில் நம்பகத்தன்மையை உறுதி செய்கிறது. சாதாரண சார்ஜிங்கில் டிராக்டரை 7 மணி நேரம் இயக்க முடியும். 30 நிமிட விரைவு சார்ஜிங்கும் இருக்கிறது. வாகன மேலாண்மைக்கான மொபைல் செயலி பயன்பாடும் இருக்கிறது.

இவர்களது இணையதளம்: www.moonrider.ai;


இ-மெயில்: info@moonrider.ai.

விவரங்களுக்கு: இ மெயில்: Sethuraman.sathappan@gmail.com


அலைபேசி: 9820451259 இணையதளம்: www.startupandbusinessnews.com

- சேதுராமன் சாத்தப்பன் -

Advertisement