வரத்து அதிகரிப்பால் சின்ன வெங்காயம் விலை சரிவு

வரத்து அதிகரிப்பால் சின்ன வெங்காயம் விலை சரிவு


ப.வேலுார்:சின்ன வெங்காயம் வரத்து அதிகரிப்பால், தேவை குறைந்து விலை சரிவடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை, ராசிபுரம், பவித்திரம், தலைமலை, வரகூர் பகுதிகளில் சின்ன வெங்காயம், ஆயிரக்கணக்கான ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அதிக விலையை எதிர்பார்த்து விதை வெங்காயம் இருப்பு வைத்திருந்த விவசாயிகளும், தண்ணீர் பற்றாக்குறையால் பயிர் செய்ய முடியாது என்பதால், விற்பனை செய்து வருகின்றனர். கடந்த வாரம், சின்ன வெங்காயம் ஒரு கிலோ, 50 ரூபாய்க்கு விற்றது. தற்போது, 25 ரூபாயாக சரிவடைந்துள்ளது. இதனால், வெங்காயத்தை இருப்பு வைத்திருந்த விவசாயிகள், அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதுகுறித்து, வெங்காய விவசாயிகள் கூறியதாவது: சின்ன வெங்காயம் சாகுபடிக்கு, விதை முதல் அறுவடை வரை ஏக்கருக்கு, ஒரு லட்சம் ரூபாய் செலவாகிறது. சாகுபடி காலம் மூன்று மாதம் என்பதால், அதிகளவு விவசாயிகள் சின்ன வெங்காயம் சாகுபடி செய்து வந்தனர். தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், அடுத்த விதைப்பணி மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது. இதனால் பட்டறைகளில் சேமித்து வைத்திருந்த, பல்லாயிரம் டன் சின்ன வெங்காயத்தை, தற்போது விற்பனை செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதனால் சின்ன வெங்காயத்தின் விலை சரிவடைந்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
ப.வேலுாரை சேர்ந்த சின்ன வெங்காய மொத்த வியாபாரி பாஷா கூறுகையில், ''தற்போது, உடுமலைப்பேட்டை பகுதியில் இருந்து சின்ன வெங்காயம், சந்தைக்கு அதிகளவில் விற்பனைக்கு வந்துள்ளது. மேலும், நாமக்கல் மாவட்ட பகுதிகளில் இருந்தும், சேமித்து வைத்திருந்த சின்ன வெங்காயத்தை விற்பனைக்கு விவசாயிகள் கொண்டு வந்துள்ளனர். இதனால் சின்ன வெங்காயம் வரத்து அதிகளவில் உள்ளது. விலை சரிவுக்கு இதுவே காரணம்,'' என்றார்.

Advertisement