முருகன் வழியில் மும்மொழிக்கு ஆதரவு தெரிவியுங்கள் ஹிந்து தமிழர் கட்சி வலியுறுத்தல்

திண்டுக்கல்:''தமிழ், ஆங்கிலம், மலையாளம் ஆகிய 3 மொழிகளில் அறிவிப்பு விளம்பர பலகை வைக்கப்படும் திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் வழியில் மும்மொழி கல்வி கொள்கைக்கு ஆதரவு தெரிவியுங்கள்,'' என, ஹிந்து தமிழர் கட்சி நிறுவன தலைவர் ராம ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது : முருகனுக்கு மாநாடு நடந்த பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தமிழ், ஆங்கிலம், மலையாள எழுத்துக்களில் அறிவிப்பு பலகை பல ஆண்டுகளாக வைக்கப்பட்டு இருக்கிறது. மும்மொழி கல்விக் கொள்கையின்படி தமிழ், ஆங்கிலம், விருப்பமொழியாக ஏதேனும் ஒரு மொழியை அரசு பள்ளி மாணவர்கள் கற்றுக் கொள்ள சொல்கிறது. கட்டாயம் ஹிந்தியை கற்று கொள்ள வேண்டும் என்று அந்த கொள்கையில் எந்த இடத்திலும் சொல்லவில்லை.

தமிழக அரசு இரு மொழி கல்விக் கொள்கை என மாணவர்களின் கல்வி உரிமையில் தலையிடுகிறது. ஹிந்தி மொழியை தார் பூசி அழிக்கும் இவர்களுக்கு தமிழ் அல்லாத பிறமொழி எழுத்துக்களை அழிப்பதற்கு தைரியம் இருக்காது. மலையாள மொழி பேசுபவர் மலையாளம், ஆங்கிலம், ஹிந்தி என மும்மொழிகளை கற்று கொள்கிறார்கள். அதனால் மலையாளம் அழிந்து விடவில்லை.

ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் தெலுங்கு மொழி பேசும் மக்கள் மும்மொழி கற்றுக்கொள்கிறார்கள். இதனால் தெலுங்கு மொழி அழிந்து விடவில்லை. அதேபோல் தான் கன்னடமும். தமிழகத்தில் இருக்கும் மாணவர்கள் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி கற்றுக்கொண்டால் திராவிடத்தின் பெயரால் இவர்கள் செய்யும் அரசியல் மக்களுக்கு புரிந்து முகமூடி கிழிந்து விடும் என்பதால் இரு மொழி கொள்கை போதும், மும்மொழி கல்விக் கொள்கை வேண்டாம் என அடம்பிடிக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement