பாட்டும் வயலினும்...: அற்புத 'அய்யர் சகோதரிகள்'

'அம்மா கீதா, சித்தி உமா இருவரும் மாயவரம் சகோதரிகள் என்ற பெயரில் இசைக்கச்சேரிகளில் பாடுவர். நானும் அக்கா ஸ்ரீவித்யாவும் அய்யர் சகோதரிகள் என்ற பெயரில் வயலின் இசைக்கச்சேரியும் கர்நாடக பாட்டு கச்சேரியும் நடத்துகிறோம்' என்று இன்னிசையாய் பேசுகிறார் சென்னை மயிலாப்பூர் சுதா ஆர்.எஸ்.அய்யர்.

சமீபத்தில் சமஸ்கிருதத்தில் பிஎச்.டி., முடித்த சுதா, தனது 15 ஆண்டு இசைப்பயணம் குறித்து பேசியது:

கர்நாடக இசைக் குடும்பத்தில் பிறந்தவள் நான். ஐந்து வயதில் கர்நாடகப் பாடலை அம்மாவிடம் கற்றுக் கொண்டேன்.

எனக்கும் அக்காவிற்கும் வீணை குரு லலிதா ராகவன்.

இவர் லால்குடி ஜெயராமனை போல ராகம் வாசிப்பார்; எம்.எஸ்.கோபாலகிருஷ்ணன் போல ஸ்வரம் வாசிப்பார். குன்னக்குடி வைத்தியநாதனின் பாணியும் பிடிக்கும்.

குருவிடம் கற்றதை நாங்கள் மேடைகளில் வாசிக்கிறோம். சகோதரிகளாக கச்சேரிகளில் பாடுகிறோம், வயலின் வாசிக்கிறோம்.

பாட்டையும் வயலினையும் இரு கண்களாக பாவிக்கிறேன். ஆனால் மொழியைத் தாண்டி ரசிகர்களை உணர்ச்சிவசப்படுத்துவது இசைக்கருவிகளின் இசை தான். அங்கு இசை மொழியாகிறது. மொழியைத் தாண்டிய பாவம், ரசம் எல்லாவற்றையும் கருவியில் கொண்டு வரமுடியும்.

நாம் பாடும் போது ரொம்ப நேரம் ராகத்தையே கேட்க முடியாது. வயலினில் எவ்வளவு நேரம் வாசித்தாலும் கேட்க சுகமாக இருக்கும். திருமண நிகழ்வுகளில் இசைக்கருவிகளின் சங்கமத்தையே விரும்புகின்றனர். ராகம் தாளம் வாத்தியம் மூன்றையும் சேர்த்து கேட்கும் போது முழுமையாக இருக்கும்.

மேடை பழகும் சமயத்தில் இருவரும் வயலின் கச்சேரியாக ஆரம்பித்தோம். பக்கவாத்தியமாக வயலின் வாசிப்பது சவாலான விஷயம். பாடகருக்கேற்ப உடனடியாக வாசிக்க வேண்டும். பாடகராக நிறைய ரிகர்சல் எடுத்து பாடிப் பயிற்சி எடுக்க முடியும். பக்கவாத்தியத்தில் 'ஆன் தி ஸ்பாட்' பாடகரின் பாடலுக்கு ஏற்ப வாசிக்க வேண்டும். ரசிகர்களின் மனோபாவத்திற்கு ஏற்ப திடீரென ஒரு பாடலை பாடினால் கூடவே வயலின் வாசிக்க வேண்டும். அதுதான் மனோதர்மம். கர்நாடக இசையின் அழகே அது தான். 'த்ரில்' என்று சொல்லலாம். நிறைய ராகம், ஸ்வரம் பாடும் பாடகர்களுடன் வாசிப்பது சுகமாக இருக்கும். நமது திறமையும் மேம்படும்.

பாடகராக பிடித்த விஷயம் என்னவெனில் ரசிகர்களின் விருப்பத்திற்கேற்ப பாடல்களை பாடலாம். நமக்கு பிடித்த பாடல்களை பாட வாய்ப்பு கிடைக்கும். பக்கவாத்தியமாக வயலின் வாசிக்கும் போது பாடகருக்கு பிடித்த பாடலுக்கு தான் வாசிக்க முடியும். என்னைக் கவர்ந்த ராகம் சுப பந்துவராளி, பந்துவராளி ராகம் தான். சுப பந்துவராளி ராகத்தில் 'எத்தனை நாள் செல்லுமோ….ஐயா' எனக்கு பிடிக்கும்.

நிறைய பெண் கலைஞர்கள் வயலின் வாசிக்கின்றனர் என்றாலும் இசைத்துறையில் பாடகராக, வயலின் இசைக்கலைஞராக பயணத்தை தொடர்வதே விருப்பம் என்றார்.

Advertisement