சாலை வசதி இல்லை: சடலத்தை 3 கி.மீ., சுமந்து சென்ற கிராம மக்கள்

மேட்டுப்பாளையம்:கோவை மாவட்டம் காரமடை அருகே மலைக்கிராமத்தில் சாலை வசதி இல்லாததால், இறந்தவரின் உடலை டோலி கட்டி 3 கிலோ மீட்டர் தூரம் வரை கிராம மக்கள் தூக்கிச் சென்றனர்.
கோவை மாவட்டம், காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நெல்லித்துறை கிராம ஊராட்சியில், கடம்பன் கோம்பை என்னும் மலைக்கிராமம் உள்ளது. பில்லூர் அணையை ஒட்டி வனப்பகுதிகள் சூழ இக்கிராமம் அமைந்துள்ளது.
இக்கிராமத்தில் போதிய தார் சாலை வசதி இல்லை, இருக்கும் பாதையும் குண்டும், குழியுமாக மோசமான நிலையில் உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் போக்குவரத்திற்கு பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். அப்பகுதியில் ஜீப் அல்லது ஆட்டோ போன்றவையை தான் போக்குவரத்திற்கு மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கடம்பன் கோம்பை பகுதியை சேர்ந்த மணி என்பவர் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் இருந்து, ஆம்புலன்ஸ் வாயிலாக அவரது உடல் நெல்லித்துறை ஊராட்சிக்குட்பட்ட கடம்பன் கோம்பை அருகே உள்ள நீராடி பகுதிவரை கொண்டு வரப்பட்டது. சாலை வசதி இல்லாததால் மேற்கொண்டு ஆம்புலன்ஸ் வாகனத்தை இயக்க முடியவில்லை. அங்கேயே அவரது உடல் இறக்கி வைக்கப்பட்டது.
இதையடுத்து, அங்கிருந்து 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பகுதி மக்களே டோலி கட்டி உடலை தோளில் சுமந்து எடுத்து சென்றனர். உரிய சாலை வசதி இல்லாத நிலை பல ஆண்டுகளாக நீடிப்பதாகவும், அரசு அதிகாரிகள் உரிய ஆய்வு நடத்தி சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.







