இன்ஸ்டாகிராமில் பழகிய நபரிடம் ரூ. 16.21 லட்சத்தை இழந்த பெண்

புதுச்சேரி : புதுச்சேரியை சேர்ந்த பெண்ணுக்கு, இன்ஸ்டா கிராம் நண்பர் மூலம் பரிசு பொருள் அனுப்பியுள்ளதாக கூறி, ரூ.16.21 லட்சத்தை மோசடி கும்பல் ஏமாற்றியுள்ளது.

காலாப்பட்டை சேர்ந்த பெண் ஒருவர், இன்ஸ்டாகிராம் மூலம் அடையாளம் தெரியாத ஆண் நபருடன் நட்பாக பழகி வந்துள்ளார். அந்த நபர், திடீரென அந்த பெண்ணிற்கு, கூரியர் மூலம் பரிசு பொருட்கள் அனுப்பியுள்ளதாக கூறியுள்ளார்.

அதற்கு, அடுத்த நாள் அந்த பெண்ணை தொடர்பு கொண்ட மற்றொரு நபர், தான் சுங்கத்துறை அதிகாரி பேசுவதாக கூறி, உங்களுடைய பெயருக்கு பரிசு பொருள் ஒன்று வந்துள்ளதாகவும், அதனை டெலிவரி செய்வதற்கு, செயலாக்க கட்டணம் மற்றும் பிற கட்டணங்கள் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். இதை நம்பிய அப்பெண் மர்ம நபர் கூறியபடி ரூ.16 லட்சத்து 21 ஆயிரத்து 607 அனுப்பி, ஏமாந்தார்.

கருவடிக்குப்பத்தை சேர்ந்த ஆனந்த சுப்ரமணியன் என்பவர்,கேதார்நாத் சுற்றுலா பேக்கேஜ் தொடர்பாக ஆன்லைனில் விளம்பரத்தை பார்த்தார். அதில் கிடைத்த மொபைல் எண்ணை தொடர்பு கொண்டு,சுற்றுலா பேக்கேஜ் தொடர்பாக பேசினார்.

எதிர்முனையில் பேசிய நபர், விடுதி முன்பதிவுக்கு ரூ.10 ஆயிரம், விமான டிக்கெட் மற்றும் கார் முன்பதிவு செய்வதற்கு ரூ.42 ஆயிரம் அனுப்புமாறு கூறியுள்ளார். இதை நம்பிய ஆனந்தசுப்ரமணியன், அந்த மர்ம நபருக்கு ரூ.67 ஆயிரம் அனுப்பிஏமாந்தார்.இதே போல், வில்லியனுார் சுல்தான்பேட்டையை சேர்ந்த ஷபிர்தீன் என்பவரின் நண்பர் பெயரில், மர்ம நபர் ஒருவர் போலி பேஸ்புக் கணக்கு துவங்கி, அதன் வழியாக ஷபிர்தீனிடம், அவசர தேவைக்கு பணம் அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளார். அவரும், தனது நண்பர் என நினைத்து, அந்த மர்ம நபருக்கு ரூ.50 ஆயிரம் அனுப்பி ஏமாந்தார்.

இதேபோல், புதுச்சேரி ரத்னா நகரைசேர்ந்த நிர்மல்குமார் ரூ,1,500, பிச்சவீரன்பேட் பகுதியை சேர்ந்த வீரப்பா ரூ. 9 ஆயிரத்து 500 என,மொத்தம் 5பேர் ஆன் லைனில், 17 லட்சத்து 49 ஆயிரத்து 600 ரூபாயை மோசடி கும்பலிடம் இழந்துள்ளனர். இதுகுறித்தபுகார்களின் பேரில், புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement