சிறுமியை கர்ப்பமாக்கிய மத போதகருக்கு 'போக்சோ' மனைவி, மகனும் சிக்கினர்

நாகர்கோவில் : தக்கலை அருகே 13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய, 63 வயது கிறிஸ்தவ மத போதகர், மனைவி, மகனுடன் கைது செய்யப்பட்டார்.


கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே செம்பருத்திவிளையைச் சேர்ந்தவர் ஜான் ரோஸ், 63; பெருஞ்சிலம்பு கரும்பாலை பகுதியில் ஜெபக்கூடம் நடத்தி வருகிறார். இங்கு அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜெபம் நடத்த வருவது வழக்கம்.


அப்பகுதியைச் சேர்ந்த தொழிலாளி ஒருவரின் மனைவி, 13 வயது மகள் அடிக்கடி இங்கு ஜெபம் நடத்த வந்துள்ளனர். சிறுமி, மதபோதகர் வீட்டில் சிறு, சிறு வேலைகளை செய்து வந்தார்.


இந்நிலையில், சிறுமியின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டது. அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்த போது, சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டதும், கர்ப்பமாக இருப்பதும் உறுதியானது.

சிறுமியிடம் விசாரித்த போது, போதகர் ஜான் ரோஸ் செய்த பாலியல் கொடுமைகளை கூறியுள்ளார்.

இதுகுறித்து, சிறுமியின் பெற்றோர் கேட்டபோது, அவர்களை மிரட்டிய ஜான் ரோஸ், கேரள மாநிலம், கொல்லத்துக்கு அழைத்துச் சென்று சிறுமிக்கு கருக்கலைப்பு செய்ய முயற்சி செய்துள்ளார். இதுகுறித்து, டாக்டர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். தொடர்ந்து, ஜான் ரோஸ் தலைமறைவானார்.

கேரள போலீசார், மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். கோவையில் தலைமறைவாக இருந்த ஜான் ரோஸ், அவரது மனைவி ஜெலின் பிரபா, மகன் பிரதீப் ஆகியோரை போலீசார் போக்சோ வழக்கில் நேற்று கைது செய்தனர். சிறுமி சில நாட்களுக்கு முன் குழந்தை பெற்றெடுத்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

Advertisement