புறக்கணிப்பதாக புலம்பும் மேலவாசல் மக்கள்

மதுரை : மதுரை 76 வது வார்டில் உள்ள மேலவாசல், திடீர்நகர், டவுன்ஹால் ரோடு, பெருமாள் தெப்பம் பகுதிகளில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். நகரின் இதயம் போன்ற பகுதியான பெரியார் பஸ்ஸ்டாண்டை சுற்றியுள்ள இப்பகுதியில் கிராமங்களைவிட அடிப்படை வசதி குறைவாக உள்ளதாகவும், வசிப்பதற்கே லாயக்கற்றதாகவும் உள்ளதாக குடியிருப்போர் புலம்புகின்றனர்.

முழுமையாக புறக்கணிக்கின்றனர்



சிதம்பரம், மேலவாசல்: கட்டடங்களின் பின்புறத்தில் கழிவுநீர் செல்லும் குழாய்கள் பழமையானதாகவும், உடைந்தும் உள்ளன. குடிநீர் குழாய்களை மாற்றி அமைத்து, சிமென்ட் தளம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் நுழைவு வாயில் பகுதியில் உள்ள எம் மற்றும் எச் பிளாக்குகளில் மட்டும் தொட்டிகள் அமைத்தனர்.

மற்ற பகுதிகளுக்கு நிதி வந்ததும் அமைப்பதாக கூறி பாதியில் நிறுத்தி விட்டனர். மாநகராட்சி வாட்ஸ்ஆப் எண்ணில் புகார் அனுப்பினால் கண்டுகொள்வதில்லை. இதனால் இந்தப் பகுதி முழுமையாக புறக்கணிக்கப்படுகிறது. அம்ரூத் திட்டம் இன்னும் தொடங்கவே இல்லை. கட்டடங்கள் ஆங்காங்கே இடிந்து உள்ளதைக் கண்டறிந்து பராமரிக்க வேண்டும்.

கொசுக்களால் நோய்த்தொற்று



இந்துமதி, மேலவாசல்: துப்புரவு பணியாளர் நீண்ட விடுமுறை எடுத்தாலும் மாற்றுப் பணியாளர் யாரும் வருவதில்லை. இதனால் குப்பை அகற்றப்படுவதில்லை. அங்கன்வாடி மையத்தின் பின்புறம்கூட கழிவுநீர் தேங்கி நிற்கிறது.

இதனால் குழந்தைகள் பாதிக்க அதிக வாய்ப்புள்ளது. குடிநீர் எந்நாளும் கழிவுநீர் கலந்துதான் வருகிறது. ஆழ்துளை கிணறு 3 ஆண்டுகளாக செயல்படவில்லை. மழை நீர் வீட்டுக்குள்ளும் வருகிறது.

மின் இணைப்புகள் சீரற்று இருப்பதால் 'ஷாக்' அடிக்கும் வகையில் ஆபத்தாக உள்ளது. 'ஜே பிளாக்'கில் மின்ஒயர்கள் ஆபத்தாக தொங்குகிறது. வெளிச்சம் குறைந்த தெருவிளக்குகளை மாற்ற வேண்டும். இப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்.

ரேஷன் கடைகள் திறப்பு

அவசர காலத்தில் ஆம்புலன்ஸ் வரமுடியாததால் திடீர் நகர் நுழைவு வாயில் பகுதியை இருவழி ரோடாக மாற்ற வேண்டும். மேலவாசல் பகுதி முழுவதும் உயர் மின்கோபுர விளக்குகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. குடிநீர் பற்றாக்குறை நேரங்களில் லாரி மூலம் விநியோகம் செய்கிறோம். ரூ. 40 லட்சம் செலவில் 4 ரேஷன் கடைகள், திடீர் நகரில் புதிய சமுதாயக் கூடம் திறந்துள்ளோம். மேலவாசலிலும் சமுதாயக் கூடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. விரைவில் திறக்கப்படும். புதிதாக 10 ரோடுகள் ரூ. 1.6 கோடி லட்சத்தில் அமைத்துள்ளோம். டவுன்ஹால் பகுதி பெரும்பாலும் வணிக கட்டடங்களாக இருப்பதால் மின் இணைப்பு புதிதாக மாற்றப்பட்டுள்ளது.

- கார்த்திக், தி.மு.க., கவுன்சிலர்

Advertisement