10 தொகுதிகளிலும் தி.மு.க.,வுக்கே வெற்றி அமைச்சர் மூர்த்தி பேச்சு

மதுரை : மதுரையில் 10 சட்டசபை தொகுதிகளிலும் தி.மு.க., வெற்றி பெறும் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.

மதுரை விளாங்குடியில் வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் மேற்கு சட்டசபை தொகுதிக்கான பொது உறுப்பினர்கள் கூட்டம் அவைத் தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடந்தது.

அமைச்சர் மூர்த்தி பேசியதாவது: 2026 சட்டசபை தேர்தலில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற முதல்வர் ஸ்டாலின், துணைமுதல்வர் உதயநிதி உத்தரவிட்டுள்ளனர். மதுரை மேற்கு தொகுதி 20 ஆண்டுகளாக தி.மு.க., வசம் இல்லை. தற்போது நகர் நிர்வாகிகள் ஒத்துழைப்புடன் மாவட்டத்தில் 10 தொகுதிகளையும் கைப்பற்றுவோம். மேற்கில் அதிக ஓட்டுகள் பெறுவோம் என்றார்.

அமைச்சர் தியாகராஜன் பேசுகையில், 2021 தேர்தலில் 10ல் 5 தொகுதிகளில் தி.மு.க., வெற்றி பெற்றது. மேற்கு தொகுதியில் தொடர்ந்து 3 முறை தோல்வியுற்றுள்ளது. அமைச்சர் மூர்த்தி திறமையானவர். கையில் நிறைய வைத்திருக்கிறார். வரும் தேர்தலில் வெற்றி உறுதி என்றார். மண்டல தலைவர் வாசுகி பங்கேற்றனர்.

மேற்கு சட்டசபை தொகுதி கூட்டம் என்றாலும், நகர் செயலாளர் தளபதி வசமுள்ள மூன்று தொகுதிகளைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பொன்முத்துராமலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ., வேலுச்சாமி, முன்னாள் மேயர் குழந்தைவேலு, தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயராம், மேயர் இந்திராணி பொன்வசந்த், மண்டல தலைவர்கள் சரவணபுவனேஸ்வரி, சுவிதா பங்கேற்றனர்.

Advertisement