கிராமத்திற்கு பஸ் வசதியின்றி நடந்து செல்லும் அவலநிலை கண்டுகொள்ளாத அமைச்சர்

முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே சடையனேரி கிராமத்தில் பஸ் வசதி இல்லாததால் 2 கி.மீ., நடந்து சென்று பஸ்ஸில் செல்லும் அவலநிலை உள்ளது. இதுகுறித்து கடந்த நான்கு ஆண்டுகளாக பலமுறை மனுக்கள் அளித்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. தொகுதி எம்.எல்.ஏ.,வும், பால்வளத்துறை அமைச்சருமான ராஜகண்ணப்பன் கண்டுகொள்ளவில்லை என மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

சடையனேரி கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். விவசாயம், கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாக உள்ளது. பள்ளி, கல்லுாரி மாணவர்கள் அத்தியாவசிய வேலைக்கு செல்லும் கிராமமக்கள் முதுகுளத்துார், சிக்கல் செல்கின்றனர். இதனால் தினந்தோறும் கூடுதல் பணம் செலவு செய்து செல்லும் அவலநிலை உள்ளது. இரண்டு கி.மீ., நடந்து சென்று சடையனேரி விலக்கு ரோட்டில் காத்திருந்து பஸ்ஸில் செல்கின்றனர்.

இதுகுறித்து பா.ஜ., ஒன்றிய தலைவர் மோகன்தாஸ் கூறியதாவது, சடையனேரி கிராமத்திற்கு கடந்த பல ஆண்டுகளாகவே பஸ் வசதி இல்லை. இதுகுறித்து கடந்த நான்கு ஆண்டுகளாகவே மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. முதுகுளத்துார் எம்.எல்.ஏ., அலுவலகம், போக்குவரத்து துறை அதிகாரி, முதல்வர் தனிப்பிரிவு உட்பட பலமுறை அதிகாரிகளிடம் மனுஅளித்தும் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அமைச்சர் ராஜகண்ணப்பன் முதுகுளத்தூர் தொகுதியில் ஒரு சில கிராமங்களில் மனுக்கள் அளித்த உடனே பஸ்கள் விடப்பட்டது. ஆனால் இதுவரை சடையனேரி கிராமத்திற்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அமைச்சர் தொகுதியிலே கண்டு கொள்ளாத அவலநிலை உள்ளது. இதுகுறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்றார்.

Advertisement