'இந்தியா மீது உலக நாடுகள் பார்வை' இந்தியா மீது உலக நாடுகள் பார்வை கவர்னர் தாவர்சந்த கெலாட் பெருமிதம் 

துமகூரு: ''ஆன்மிகம் மற்றும் மன நலனுக்காக உலக நாடுகள் பார்வை இந்தியா மீது உள்ளது,'' என்று, கவர்னர் தாவர்சந்த் கெலாட் பெருமிதமாக கூறினார்.

துமகூரு குனிகல் பிடனகெரே கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட நவக்கிரக தம்பதியர் கோவில் மற்றும் பசவேஸ்வர மடத்தின் புதிய கோபுரத்தை, கவர்னர் தாவர்சந்த் கெலாட் நேற்று திறந்து வைத்து பேசியதாவது:

மடத்தின் மடாதிபதிகள், முனிவர்கள், ஆச்சார்யர்கள் ஆகியோருக்கு எனது மரியாதையை செலுத்துகிறேன். இந்த விழாவில், உங்களுடன் இருக்கும் வாய்ப்பு கிடைத்தது எனது அதிர்ஷ்டம். பிடனகெரே பசவேஸ்வரா மடம் மத தலம் மட்டும் இல்லை. பக்தர்களுக்கு ஆன்மிக அமைதி மற்றும் உத்வேகம் அளிக்கும் இடமாக உள்ளது. சமூக உத்வேகத்தின் மையமாக விளங்குகிறது.

பசவேஸ்வரரின் போதனைகள், சமூக சீர்திருத்தத்திற்கு நிறைய பங்களித்து உள்ளன. இங்கு வரும் மக்கள், பசவேஸ்வரரின் போதனைகளை கேட்பது மட்டும் அல்லாமல், வாழ்க்கையின் ஒழுக்கம், சமத்துவம், பக்தியை பின்பற்றவும் உத்வேகம் பெறுகின்றனர். உலக புகழ்பெற்ற 161 அடி உயர ஐந்து முகம் கொண்ட ஆஞ்சநேயர் சிலை இங்கு நிறுவப்பட்டு உள்ளது. சனீஸ்வரர், நவக்கிரகங்களை தரிசிக்க நிறைய பக்தர்கள் வருகின்றனர்.

பன்முக தன்மை கொண்ட மடம், சமூக முன்னேற்றத்திக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பு அளித்து உள்ளது. இங்கு ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குகிறீர்கள். சமூகத்தில் நிலவும் பல்வேறு பிரச்னைகளை தீர்க்க, நீங்கள் எடுத்து வரும் நேர்மறையான நடவடிக்கைகள் பாராட்டதக்கவை. ஆன்மிகம் மற்றும் மன நலனுக்காக உலக நாடுகள் பார்வை இந்தியா மீது உள்ளது. இதற்கு 'பிரயாக்ராஜ் கும்பமேளா' சிறந்த உதாரணமாக விளங்குகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement