மைசூரு - பெங்களூரு 'ஏஐ கேமரா' குளறுபடி தவறான ரசீது இருந்தால் வழக்கு தள்ளுபடி

மைசூரு,: விபத்தை தவிர்ப்பதற்காக பெங்களூரு - மைசூரு சாலையில் பொருத்தப்பட்ட 'ஏஐ' கேமராக்களால், விதிமுறைக்கு உட்பட்டு பயணித்த போதும், பல வாகனங்கள் அபராதம் செலுத்தும்படி ரசீது வந்ததால், வாகன ஓட்டிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

மைசூரு - பெங்களூரு இடையே அமைக்கப்பட்ட 10 வழி விரைவு சாலை திறந்தது முதல் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகரித்தன. இதற்கு அதிவேகமே காரணம் என்பதை உறுதி செய்த போலீசார், ஏ.ஐ., எனும் செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் மூலம், வேகத்தை கட்டுப்படுத்த தீர்மானித்தனர்.

அதன்படி, 60க்கும் மேற்பட்ட இடங்களில் ஏஐ கேமராக்கள் பொருத்தப்பட்டன. இதன் பலனாக விபத்துகள் வெகுவாக குறைந்தது. இதனால் போக்குவரத்து போலீசார் நிம்மதி அடைந்தனர். தற்போது ஏஐ கேமராக்கள், போக்குவரத்து போலீசாருக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.

இச்சாலையில் வாகன ஓட்டிகள் விதிமுறைக்கு உட்பட்டு 100 கி.மீ.,க்கு குறைவாக வாகனத்தை ஓட்டி சென்றாலும், காரில் பயணிக்கும் போது சீட் பெல்ட் அணிந்திருந்தாலும், ஹெல்மெட் அணிந்து சென்றாலும், அபராதம் கட்டும்படி வாகன ஓட்டிகளுக்கு தகவல்கள் வருகின்றன.

இது தொடர்பாக போக்குவரத்து ஏ.டி.ஜி.பி., சரத் சந்திரா கூறியதாவது:

ஊழியர்கள் பற்றாக்குறையால், மைசூரு - பெங்களூரு நெடுஞ்சாலையில் உள்ள அனைத்து போக்குவரத்து விதிமீறல்களையும் சரிபார்ப்பது சவாலாக உள்ளது.

ஏஐ கேமரா மூலம் படம் பிடிக்கப்படும் வாகனங்கள் செல்லும் வேகத்தை, இந்த திரையில் காண்பிக்கும். இருப்பினும், தவறான தகவல்கள் வருவது கவலை அளிக்கிறது. எந்தவொரு தானியங்கி அமைப்பும் கோளாறுகளை சந்திக்க கூடும்.

அதுபோன்று சென்னபட்டணா, ராம்நகர் போன்ற இடங்களில், தங்கள் கார்கள் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்தாலும், அதிவேகமாக வாகனம் ஓட்டியதாக நோட்டீஸ் வந்துள்ளதாக, வாகன உரிமையாளர்கள் இடம் இருந்து புகார்கள் வந்துள்ளன.

தவறான ரசீதுகளால் பாதிக்கப்பட்ட ஓட்டுநர்களுக்காக தனி அமைப்பு உருவாக்கப்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்ட ஓட்டுநர்கள், ஏ.டி.ஜி.பி., அலுவலகத்துக்கு, adgpcts@bgl.vsnl.net.in என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ அல்லது போலீஸ் எஸ்.பி., அலுவலகத்திலோ முறையிடலாம்.

பாதிக்கப்பட்டவர் விதிமுறைப்படி நடந்து கொண்டாரா என்பதை கேமரா பதிவை ஆய்வு செய்த பின், கேமரா மீது தவறு இருந்தால், அந்நபரின் அபராதத்தை தள்ளுபடி செய்வோம்.

இவ்வாறு கூறினார்.

Advertisement