'சக்தி' திட்டத்தில் இதுவரை 397 கோடி பெண்கள் பயணம்

பெங்களூரு: 'அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் 'சக்தி' திட்டத்தின் கீழ், இதுவரை 397 கோடி பெண்கள் பயணித்துள்ளனர்,' என கர்நாடக அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன், அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் 'சக்தி' திட்டத்தை அமல்படுத்தியது.

இது தொடர்பாக கர்நாடகா அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:

கர்நாடகாவில் சக்தி திட்டம் அமலான 2023 ஜூன் 11 முதல் 2025 பிப்., 21ம் தேதி வரை, 397.97 கோடி பெண்கள், அரசு பஸ்களில் இலவசமாக பயணித்துள்ளனர். இதன் டிக்கெட் மதிப்பு, 9,743.09 கோடி ரூபாயாகும்.

இத்திட்டம் துவக்கத்தில், 2023 ஜூன் 11 முதல் ஜூன் 30 வரை, 10.54 கோடி பெண்கள் பயணித்தனர்; இதன் டிக்கெட் மதிப்பு 248.30 கோடி ரூபாயாகும். 2023 ஜூலையில் 19.63 கோடி பெண்கள் பயணித்தனர்; இதன் டிக்கெட் மதிப்பு 453.07 கோடி ரூபாயாகும்; ஆகஸ்டில் 20.23 கோடி பெண்கள் பயணித்தனர்; இதன் டிக்கெட் மதிப்பு 459.10 கோடி ரூபாயாகும்.

ஆனால், திடீரென பஸ்களில் இலவசமாக பயணிப்போர் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்து உள்ளது. 2023 செப்டம்பரில் 18.95 கோடி பெண்களும்; அக்டோபரில் 18.26 கோடி பெண்களும்; நவம்பரில் 18.25 கோடி பெண்களும் பயணித்துள்ளனர்.

2023 டிசம்பர் முதல் 2024 ஜூன் வரை காலகட்டத்தில், சராசரியாக 18 முதல் 19 கோடி பெண்கள் பயணித்துள்ளனர். பின் மீண்டும் ஜூலையில் அதிகரித்து, 20.28 கோடி பெண்கள் பயணித்துள்ளனர்.

இத்திட்டத்தின் கீழ், 2024 டிசம்பரில் அதிகபட்சமாக 21.28 கோடி பெண்கள் பயணித்தனர். இதன் டிக்கெட் மதிப்பு 515.69 கோடி ரூபாய். நடப்பாண்டு பிப்., 21ம் தேதி மட்டும் 74.07 லட்சம் பெண்கள் பயணித்து உள்ளனர். இதன் டிக்கெட் மதிப்பு, 20.19 கோடி ரூபாயாகும்.

பெங்களூரில் பி.எம்.டி.சி., பஸ்களில் பயணித்தவர்களின் எண்ணிக்கை 126.79 கோடியாகும். இதன் டிக்கெட் மதிப்பு, 1,686.17 கோடி ரூபாய்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையில், 'போக்குவரத்து கழகங்களுக்கு பணத்தை செலுத்துவதில் தாமதம் ஏற்படுகிறது' என எதிர்க்கட்சியான பா.ஜ., குற்றம் சாட்டியிருந்தது.

அதற்கு அரசு, 'நிலுவையில் உள்ள தொகை, விரைவில் வழங்கப்படும்' என தெரிவித்துள்ளது.

Advertisement