உக்ரைன் - ரஷ்யா போரில் இறந்த மகன் நினைவாக கோவில் கட்டிய பெற்றோர்

ஹாவேரி: உக்ரைன் - ரஷ்யா போரின் போது, குண்டுவெடிப்பில் பலியான டாக்டர் நினைவாக, அவரது பெற்றோர் கோவில் கட்டி உள்ளனர்.
ஹாவேரியின் ராணிபென்னுார் சலகேரி கிராமத்தில் வசிப்பவர் சேகரப்பா. இவரது மனைவி விஜயலட்சுமி. இந்த தம்பதியின் மகன் நவீன். உக்ரைனில் மருத்துவம் படித்தார். உக்ரைன் - ரஷ்யா இடையில் நடந்த போரின் போது, ரஷ்யா வீசிய குண்டில் உணவு வாங்க சென்ற நவீன், கடந்த 2022 ம் ஆண்டு மார்ச் 1 ம் தேதி உயிரிழந்தார். அன்றைய தினம் சிவராத்திரி ஆகும்.
உயிரிழந்த நவீன் உடல் இருபது நாட்களுக்கு பின், அவரது உடல் சொந்த ஊருக்கு வந்தது. தாவணகெரே அரசு மருத்துவமனைக்கு உடல் தானமாக கொடுக்கப்பட்டது. இந்நிலையில் நவீன் நினைவாக அவரது பெற்றோர், சலகேரி கிராமத்தில் சிவன் கோவில் கட்டி உள்ளனர்.
அந்த கோவிலின் திறப்பு விழா வரும் 26 ம் தேதி, சிவராத்திரி அன்று நடக்கிறது. நாளை மாலை 6:00 மணிக்கு கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ள சிவலிங்கம் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு வரப்படுகிறது. 26 ம் தேதி சிவலிங்கத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. 27 ம் தேதி காலை 10:30 மணிக்கு சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில் மடாதிபதிகள், ஹாவேரி பா.ஜ., - எம்.பி., பசவராஜ் பொம்மை உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர். ஆஷா, கிராம பஞ்சாயத்து துாய்மை பணியாளர்கள் கவுரவிக்கப்படுகின்றனர்.
இதுகுறித்து நவீன் பெற்றோர் கூறுகையில், ''எம்.பி.பி.எஸ்., படிப்பை முடிக்க, ஆறு மாதங்கள் மட்டுமே இருந்த நிலையில், குண்டுவெடிப்பில் நவீன் இறந்தார். படித்து முடித்த பின் சொந்த ஊரில் மருத்துவமனை கட்டி ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்க வேண்டும் என்பது அவரது நோக்கமாக இருந்தது. ஆனால் மருத்துவமனை கட்டும் அளவுக்கு எங்களிடம் வசதி இல்லை. இதனால் கோவில் கட்டி உள்ளோம்,'' என்றனர்.
மேலும்
-
ஆஸ்திரேலிய முதியவரின் இறுதி ஆசை; இந்தியாவில் சொன்ன வாக்கை காப்பாற்றிய மனைவி நெகிழ்ச்சி!
-
யு.எஸ்.எய்டு அமைப்பின் 2 ஆயிரம் ஊழியர்கள் பணிநீக்கம்; அதிபர் டிரம்ப் உத்தரவு
-
பதவியை விட்டுக் கொடுக்கவும் தயார்; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவிப்பு
-
32 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன்; மீட்பு பணி தீவிரம்
-
ஆட்டோ வாடகை தராததால் பூ வியாபாரி அடித்துக்கொலை
-
தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு