எதற்கெடுத்தாலும் வெள்ளை அறிக்கை கேட்பதா: தி.மு.க.,

சென்னை,: ஹிந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அளித்த பேட்டி:

மகா சிவராத்திரியை மிகச் சிறப்பாக தமிழக கோவில்களில் கொண்டாட வேண்டும் என்பதற்காக, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் கொண்டாட்டத்தை துவங்கினோம். இந்தாண்டு, தமிழகத்தின் 9 பிரதான கோவில்களில், மகா சிவராத்திரியை பிரமாண்டமாக கொண்டாட உள்ளோம். ஆன்மிகத்தையும் போற்றும் ஆட்சி தான் தி.மு.க., ஆட்சி.

தமிழகத்தில் நடக்கும் தி.மு.க., ஆட்சி, நீதி தேவதையின் ஆட்சி. நீதிமன்றம் என்ன கட்டளையிடுகிறதோ, அதை செயல்படுத்த வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார். அவர் சுட்டிக் காட்டும் திசையை நோக்கி பயணம் செல்கிறோம். தி.மு.க., ஆட்சியின் குறைகளை சுட்டிக் காட்டுவதாக நினைத்து, எதற்கெடுத்தாலும் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் வெள்ளை அறிக்கை கேட்கிறார். அவர், ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது, எத்தனை முறை வெள்ளை அறிக்கை வெளியிட்டார் என்பதை சொல்ல வேண்டும்.

தமிழக ஹிந்து அறநிலையத் துறையின் பெயரை மாற்ற வேண்டும் என, காங்., தலைவர் செல்வப்பெருந்தகை கோரிக்கை விடுத்திருக்கிறார். முதல்வரிடம் எடுத்துச் செல்லப்படும்; வாய்ப்பு இருந்தால் அவர் கோரிக்கையை நிறைவேற்றுவார்.

இவ்வாறு சேகர்பாபு கூறினார்.

Advertisement