தமிழகம் உட்பட 3 மாநிலங்களில் மாவோயிஸ்ட் வேட்டை தீவிரம்

2

சென்னை: மாவோயிஸ்ட்களுக்கு எதிராக, தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகாவில், என்.ஐ.ஏ., அதிகாரிகள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுஉள்ளனர்.

கடந்த 2017ல், கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம், எடக்கரை வனப் பகுதியில், தமிழகத்தைச் சேர்ந்த மாவோயிஸ்ட்கள் ஆயுதப் பயிற்சி பெற்றனர். அவர்களை, தமிழகம் மற்றும் கேரள மாநில நக்சல் ஒழிப்பு படையினர் சுற்றி வளைத்து, துப்பாக்கிச் சூடு நடத்தினர். ஆனாலும், அவர்கள் தப்பி விட்டனர்.

சன்மானம் அறிவிப்பு



இதுகுறித்து, என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து, வேலுார் மாவட்டத்தைச் சேர்ந்த மாவோயிஸ்ட் இயக்க தலைவர் ராகவேந்திரா, 45, என்பவரை கைது செய்தனர்.

அத்துடன், தேடப்படும் குற்றவாளிகளாக, தேனி மாவட்டம் பண்ணைபுரம் கார்த்திக், கோவை மாவட்டம் பொள்ளாச்சியைச் சேர்ந்த சந்தோஷ்குமார் மற்றும் ஷர்மிளா ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.

இவர்கள் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு, தலா, 2 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

இந்நிலையில், இரு தினங்களுக்கு முன், சென்னையில் பதுங்கி இருந்த பண்ணைபுரம் கார்த்திக்கையும், ஓசூரில் சந்தோஷ்குமாரையும், தமிழக கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர்.

அந்த போலீசாருடன் சேர்ந்து, என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகளும், மாவோயிஸ்ட்களுக்கு எதிராக தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.

உடுப்பி பகுதி



இதுபற்றி என்.ஐ.ஏ., அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகத்தில் சென்னை, கோவை, தேனி, ராமநாதபுரம், சேலம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில், மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

அதேபோல, கேரளாவில் வயநாடு, மலப்புரம், பாலக்காடு பகுதியிலும், கர்நாடக மாநிலம் உடுப்பி பகுதியிலும், மாவோயிஸ்ட் நடமாட்டம் குறித்து தகவல் வந்துள்ளது.

அதன் அடிப்படையில், அந்தந்த மாநில போலீசாருடன் இணைந்து மாவோயிஸ்ட்களை தேடி வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement