நான் பணக்காரன் வீட்டுப் பிள்ளை அல்ல; தாயின் வறுமை நினைவுகளை பகிர்ந்து துரைமுருகன் உருக்கம்

40


ராணிப்பேட்டை: 'வறுமையின் பிடியில் சிக்கித் தவித்த எனது தாயாரிடம் கரண்ட் பில் கட்டுவதற்குக் கூட காசு இல்லை' என பழைய நினைவுகளை, உருக்கத்துடன் பகிர்ந்து கொண்டார் அமைச்சர் துரைமுருகன்.

ராணிப்பேட்டையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது: நான் ஒன்றும் பெரிய பணக்கார வீட்டு பிள்ளை அல்ல. சாதாரண ஒரு நான்கு, ஐந்து ஏக்கர் நிலம் வைத்திருந்த குடிக்காரன் மகன் தான். நான் எனது வாழ்க்கையில், ஏர் ஓட்டியிருகிறேன், நாத்து நட்டு இருக்கிறேன். கத்திரிக்காய் எல்லாம் அறுத்து கொண்டு வந்து வீட்டில் கொட்டி, பெரிய காய்களை மேல் வைத்து, தலையில் சுமந்து 3 கி.மீ., தூரம் கொண்டு போய் வித்துருக்கேன்.

இலவச மின்சாரம்



அப்படிப்பட்ட துரைமுருகன் தான் நான். நான் பணக்கார வீட்டு பிள்ளை அல்ல. அதனால் தான் இன்றைக்கு உங்களுக்கு எல்லாம் இலவச மின்சாரம் கொடுத்து இருக்கிறேன். நான் மந்திரியாக இருந்தேன். எங்க தலைவர் இந்த முறை என்ன செய்யலாம் என்று கேட்டார். அப்படி செய்ததுதான் இலவச மின்சாரம் திட்டம். விவசாயிகள் எத்தனை ஆழ் துளை கிணறுகளை வேண்டுமானாலும் வைத்து கொள்ளலாம். எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் மோட்டார் போட்டுக் கொள்ளலாம்.


ஒரு ரூபாய் கிடையாது!




கிணற்றில் தண்ணீர் இருந்தால் மட்டும்போதும். ஆகையினால், விவசாயி 10வது போர் போட்டாலும் சரி, 25வது போர் போட்டாலும் சரி. இதற்காக, எத்தனை ஆயிரம் யூனிட் மின்சாரம் பயன் படுத்தினாலும் சரி ஒரு ரூபாய் கூட கட்ட தேவையில்லை என்று சொன்னேன்.பின்னர், இனிமேல் விவசாயிகள் எத்தனை ஆயிரம் யூனிட் மின்சாரம் உபயோகம் செய்யலாம் என உத்தரவு போட்டேன். பேனாவை எடுத்து கையெழுத்து போடும் போது எனது கண்ணில் இருந்து தண்ணீர் கொட்டியது.

கரண்ட் பில்



அதிகாரி ஏன் ஐயா அழுகிறீர்கள் என்று கேட்டதும், நான் எதற்கு அழுகிறேன் என்று கூறினேன்.
நான் சிறுவயதாக இருக்கும்போது, எங்கள் அம்மாவிடம் 3 பம்புசெட்கள் இருந்தது. ஆனால், தண்ணீர் இல்லாமல் எங்கள் நிலம் காய்ந்து போய் இருந்தது. 2 மாதத்திற்கு ஒருமுறை கரண்ட் பில் வரும் பொழுதெல்லாம், எங்கம்மா ஒவ்வொரு நகையா கழட்டி அடகு வைத்து பில் கட்டுவார்கள். அப்போது, நான் பச்சையப்பா கல்லூரியில் படித்து கொண்டிருந்தேன்.

துடைப்ப குச்சி



எங்கம்மா சீரியஸாக இருப்பதாக போன் வந்தது. எங்கம்மா பணக்கார வீட்டில் பிறந்தவர். அவ்வளவு நகையை போட்டு திருமணம் முடிந்த கையோடு வீட்டிற்கு வந்த என் தாய், எல்லாத்தையும் இழந்து மூக்கு மற்றும் காதில் துடைப்ப குச்சியுடன் இறந்திருந்தார். அவருக்கு பிறந்தவன் நான். என் அம்மா போல் எந்தவொரு தாயும் கண்ணீர் வடிக்கக்கூடாது என்று இந்த உத்தரவு போட முடிவு எடுத்தேன். அந்த உத்தரவின் பேரில்தான் இன்று வரை விவசாயிகள் இலவச மின்சாரத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

கால் மணி நேரம்...!



துரைமுருகன் இல்லையென்றால், இன்றைக்கு இது இல்லை. பல வேலைகளை செய்து கொண்டு இருக்கிறேன். நான் கட்சியின் பொதுச்செயலாளர். கட்சி வேலை பார்க்க வேண்டும். இந்த வேலை பார்க்க வேண்டும். உங்களிடம் அம்மா மாதிரி சொல்கிறேன். என்னால் கால் மணி நேரம் கூட தூங்க முடியவில்லை. அவ்வளவு வேலை செய்து கொண்டு இருக்கிறேன். வரும் 3,4ம் தேதி காட்பாடிக்கு வருவேன். அன்றைக்கு அதிகாரிகளை கூட்டி வந்து உங்க கோரிக்கையை நிறைவேற்றுவேன் என உறுதி கொடுக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement