ஹிந்தி மட்டும் தான் தெரியுமாம்; திருச்சி விமான நிலையத்தில் 'அடாவடி'

திருச்சி: திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் வாகனங்களுக்கான பார்க்கிங் கட்டணம் வசூல் மையத்தில் பணியாற்றும் வட மாநிலத்தினர், 'தமிழ் மற்றும் ஆங்கிலம் தெரியாது' என்று சொல்லி அடாவடியில் ஈடுபடுகின்றனர். இதனால், வாகனம் நிறுத்துபவர்களுக்கும், கட்டண வசூல் மையத்தில் இருப்பவர்களுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் நடக்கிறது.


தமிழகத்தில், சென்னைக்கு அடுத்து, இரண்டாவது பெரிய பன்னாட்டு விமான நிலையமாக திருச்சி விமான நிலையம் உள்ளது.


சிங்கப்பூர், மலேசியா, துபாய், இலங்கை, உள்ளிட்ட 14 நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.


தினமும், 3,000க்கும் மேற்பட்ட பயணியர் வந்து செல்லும் திருச்சி சர்வதேச விமான நிலைய வளாகத்தில்,கார் பார்க்கிங் மற்றும் அதற்கான கட்டண வசூல் மையம் உள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன், திருச்சிக்கு விமானத்தில் வந்த உறவினரை அழைத்துச் செல்ல வந்த ஒருவர், பார்க்கிங் பகுதியில் காரை நிறுத்தி விட்டு, அதற்கான கட்டணத்தை மையத்தில் செலுத்தியுள்ளார்.

உறவினர் வந்ததும் காரை பார்க்கிங் பகுதியில் இருந்து வெளியே எடுத்து வந்து, வருகை பகுதியில் நிறுத்தி விட்டு, உறவினரை வரவேற்க சென்றுள்ளார்.

திரும்பி வந்து பார்த்த போது, கட்டண வசூல் மையத்தில் இருந்தவர்கள், காரை பூட்டி இருந்தனர்.

அங்கிருந்தவர்களிடம் கேட்டதற்கு, கூடுதல் நேரம் காரை நிறுத்தியதால், 500 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும், என்றுதெரிவித்துள்ளனர்.

அபராத தொகையை செலுத்திய கார் உரிமையாளர், விளக்கம் கேட்டதற்கு, 'தமிழ், ஆங்கிலம் எதுவும் தெரியாது' என்று கூறி, ஹிந்தியில் பேசியதோடு, கார் சாவியை திரும்ப ஒப்படைக்காமல் அடாவடியில் ஈடுபட்டுள்ளார்.

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் பார்க்கிங் கட்டண வசூல் மையத்தில், தமிழ், ஆங்கிலம் மொழிகள் தெரியாது என்று கூறுபவரை பணியமர்த்தியது குறித்து, விமான நிலைய அதிகாரிகளிடம் புகார் தெரிவிப்பதாக கூறிய போதிலும், கட்டண வசூல் மையத்தில் இருந்தவர்கள் பொருட்படுத்தவில்லை.

இதை மொபைல் போனில்வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளனர். தினமும் ஆயிரக்கணக்கான பயணியர் வந்து செல்லும் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில், கார் பார்க்கிங் கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும்.

அங்கு, தமிழ் மற்றும் ஆங்கிலம் பேசத் தெரிந்தவர்களை பணியில் அமர்த்த வேண்டும் என, விமானப் பயணியர் மற்றும் அவர்களுடன் வரும் உறவினர்களின் தரப்பில் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement