பல்கலை மாணவி பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரன் அடகுவைத்த 100 சவரன் மீட்பு
சென்னை : 'கூகுள் மேப் வாயிலாக, சொகுசு பங்களாக்களை அடையாளம் கண்டு, அவற்றை நோட்டமிட்டு, ஆட்டோ மற்றும் ஜீப்பில் சென்று, நகை, பணம் கொள்ளை அடித்து வந்தேன்,'' என, போலீசாரிடம் ஞானசேகரன் வாக்குமூலம் அளித்துஉள்ளார்.
சென்னை அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்முறை வழக்கில், கோட்டூர்புரத்தை சேர்ந்த, தி.மு.க., அனுதாபி ஞானசேகரன், 37, கைது செய்யப்பட்டார். இவர், சென்னை பள்ளிக்கரணை பகுதிகளில், சொகுசு பங்களாக்களை குறி வைத்து, நகை, பணம் கொள்ளை அடித்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதுதொடர்பாக, பள்ளிக்கரணை துணை கமிஷனர் கார்த்திகேயன் தலைமையிலான போலீசார், ஞானசேகரனை மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
விசாரணையில் கிடைத்த தகவல் அடிப்படையில், ஞானசேகரன் அடகு வைத்திருந்த, 100 சவரன் நகையை மீட்டுள்ளனர். மேலும், 150 சவரன் நகையை பதுக்கி வைத்திருக்கும் இடம் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.
போலீசாரிடம் ஞானசேகரன் அளித்துள்ள வாக்குமூலம்:
எனக்கு மூன்று மனைவியர். அவர்களுக்காகவும், சொந்த வீடு கட்டவும், நகை, பணம் திருட்டில் ஈடுபட்டு வந்தேன். கூகுள் மேப் வாயிலாக, பள்ளிக்கரணை பகுதியில், சொகுசு வீடுகளை அடையாளம் கண்டு, அந்த இடங்களுக்கு ஆட்டோ மற்றும் ஜீப்பில் சென்று நோட்டமிடுவேன். பூட்டி கிடக்கும் வீடுகளில், மாலை, 5:00 முதல் இரவு, 9:00 மணிக்குள், நகை, பணத்தை திருடிவிட்டு தப்பி விடுவேன்.
நீலாங்கரை, கானத்தூர்பகுதிகளில் உள்ள வீடுகளிலும், நகை, பணம் கொள்ளையடித்து கைதாகி, சிறை சென்று வந்துள்ளேன். போலீசாரிடம் திருந்தி வாழ்வதாக கூறிவிட்டு, அண்ணா பல்கலை அருகே பிரியாணி கடை நடத்தி வந்தேன். ஆனாலும், என் திருட்டு தொழிலை விடவில்லை.
கொள்ளை அடித்த நகை, பணத்தில் சொகுசு வாழ்க்கை நடத்தி வந்தேன். என் கூட்டாளிகளுக்கும் பணத்தை வாரி வழங்கி உள்ளேன். கொள்ளையடிக்கும் நகையில், மூன்றில் ஒரு பங்கை என் மனைவியருக்கும். மற்ற இரண்டு பங்கை எனக்கும், தாய்க்கும் என, பங்கு பிரித்து கொள்வோம்.
இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஞானசேகரன் கொள்ளையடித்த நகை, பணத்தை வாங்கிய, அவரின் கூட்டாளிகள் குறித்த பட்டியலையும் போலீசார் தயாரித்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்த உள்ளனர். இதனால், அவரிடம் பணம் பெற்ற, அரசியல் புள்ளிகள் உள்ளிட்டோர் கலக்கம் அடைந்துள்ளனர். மேலும், ஞானசேகரனிடம் இருந்து கார் ஜீப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவர், அண்ணா பல்கலை மாணவியிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட போது, கார் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. அந்த கார் யாருடையது என்பது மர்மமாகவே உள்ளது. ஞானசேகரன் தொடர்பான வழக்கில், யார் அந்த சார், யாருடையது அந்த கார் என்ற கேள்விக்கு விடை தெரியாமலேயே உள்ளது.
மேலும்
-
நான் பணக்காரன் வீட்டுப் பிள்ளை அல்ல; தாயின் வறுமை நினைவுகளை பகிர்ந்து துரைமுருகன் உருக்கம்
-
ஜெர்மனியில் ஆட்சியைப் பிடிக்கிறது எதிர்க்கட்சி; தேர்தல் தோல்வியை ஒப்புக்கொண்டார் அதிபர் ஒலாப்
-
ஆஸ்திரேலிய முதியவரின் இறுதி ஆசை; இந்தியாவில் சொன்ன வாக்கை காப்பாற்றிய மனைவி நெகிழ்ச்சி!
-
யு.எஸ்.எய்டு அமைப்பின் 2 ஆயிரம் ஊழியர்கள் பணிநீக்கம்; அதிபர் டிரம்ப் உத்தரவு
-
பதவியை விட்டுக் கொடுக்கவும் தயார்; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவிப்பு
-
32 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன்; மீட்பு பணி தீவிரம்