மத்திய அரசு ஒதுக்கிய நிதி எங்கே சென்றது? அரசுக்கு அண்ணாமலை கேள்வி

சென்னை: 'இத்தனை ஆண்டுகளாக மத்திய அரசு ஒதுக்கிய நிதி எங்கே சென்றது?' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

அவரது அறிக்கை: கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த நெல்லித்துறை பகுதியில், முறையான சாலை வசதி இல்லாததால், மாரடைப்பு ஏற்பட்டு இறந்த ஒருவரின் உடலை, டோலி கட்டி, தூக்கிச் செல்லும் காணொளி, பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. மத்திய அரசின் திட்டங்களுக்குப் பெயரை மாற்றுவதில் மட்டும் முனைப்புடன் இருக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலின், ஒரு நாள் விளம்பரத்துக்காக, வெற்று அறிவிப்புகளை வெளியிடுவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்.

முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய் கொண்டு வந்த பிரதமரின் கிராம சாலைகள் திட்டத்தை, முதல்வரின் கிராம சாலைகள் திட்டம் என்று பெயர் மாற்றி, தி.மு.க., அரசு வெளியிட்ட அரசாணை எண் 34ன் படி, 2022-2023ம் ஆண்டிற்கு, ரூ.2,300 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகத் தெரிவித்தனர். எங்கே சென்றது இந்த நிதி? யாரை ஏமாற்ற இந்த வெற்று அறிவிப்புகள்? இந்தத் திட்டத்தின் கீழ் அமைத்த சாலைகள் எத்தனை என்பதை முதல்வர் தெரிவிப்பாரா?

கடந்த 2014ம் ஆண்டு முதல் 10 ஆண்டுகளில், மத்திய அரசின் கிராம் சதக் யோஜனா திட்டத்தின் கீழ், மலைக் கிராமங்களில் சாலைகள் அமைக்க மத்திய அரசு பெருமளவில் நிதி ஒதுக்கியிருக்கிறது. ஆனால், தமிழக மலைக் கிராமங்களில் இன்னும் சாலைகள் அமைக்காமல், தொடர்ந்து மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். அவசர மருத்துவ உதவி கிடைக்காமல், உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது.


திருப்பூர், கோவை, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாநகரங்களைச் சுற்றியிருக்கும் மலைக் கிராமங்களில் கூட சாலைகள் அமைக்கப்படாமல் இருக்கிறதென்றால், இத்தனை ஆண்டுகளாக மத்திய அரசு ஒதுக்கிய நிதி எங்கே சென்றது? இனியும் தாமதிக்காமல், தமிழகம் முழுவதும், சாலை வசதி இல்லாத மலைக்கிராமங்களுக்கு, உடனடியாக சாலைகள் அமைத்துத் தர வேண்டும். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.

Advertisement