கிராம ஊராட்சிகளில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான பிரதிநிதித்துவம்; வெள்ளை அறிக்கை கேட்கும் ராமதாஸ்

சென்னை: கிராம உள்ளாட்சிகளில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கிடைத்திருக்கும் பிரதிநிதித்துவம் எவ்வளவு என்பது குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை;
தமிழகத்தில் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒட்டு மொத்தமாகவே 12.39% மட்டும் தான் பிரதிநிதித்துவம் கிடைத்து இருப்பதாக மத்திய அரசின் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. உள்ளாட்சி அமைப்புகளில் பெரும்பாலானவை பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் ஆளுகைக்குள் தான் இருப்பதாக நம்பப்பட்டு வரும் நிலையில் இந்த புள்ளி விவரம் பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
மத்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் சார்பில் இந்திய பொது நிர்வாக நிறுவனத்தின் (Indian Institute of Public Administration - IIPA)மூலம் மேற்கொள்ளப்பட்ட 'Status of Devolution to Panchayats in States' என்ற தலைப்பிலான அறிக்கையில் தான் இந்த விவரங்கள் தெரிய வந்துள்ளன. கிராம ஊராட்சிகளில் 12.16%, ஊராட்சி ஒன்றியங்களில் 15.42%, மாவட்ட ஊராட்சிகளில் 17.25% பிரதிநிதித்துவம் மட்டும் தான் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கிடைத்திருப்பதாகத் தெரிகிறது.
மேலோட்டமாகப் பார்க்கும் போது இந்த புள்ளிவிவரங்களை நம்ப முடியவில்லை. அதே நேரத்தில் இந்த புள்ளி விவரங்கள் அடங்கிய அறிக்கை தமிழகம் உள்ளிட்ட மாநில அரசுகளால் அளிக்கப்பட்ட தரவுகளைக் கொண்டு தான் தயாரிக்கப்பட்டுள்ளது என்பதால் அதை நம்பாமல் புறக்கணிக்கவும் முடியவில்லை.
மத்திய அரசு வெளியிட்டுள்ள இந்த புள்ளி விவரங்கள் குறித்து தமிழக பஞ்சாயத்து ராஜ் துறையின் செயலாளர் ககன் தீப் சிங் பேடியிடம் கேட்டபோது, உள்ளாட்சி அமைப்புகளில் பட்டியலினத்தவர்கள் , பழங்குடியினர் அல்லாமல் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பொதுப்பிரிவினர் சேர்ந்து பல்வேறு நிலைகளில் 62% முதல் 76% வரை பிரதிநிதித்துவம் பெற்றிருப்பதாகக் கூறியுள்ளார். இதை மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் தமிழகத்தில் பொதுப்பிரினர் தான் உள்ளாட்சி அமைப்புகளில் 50%க்கும் கூடுதலான பிரதிநிதித்துவத்தைப் பெற்றுள்ளனர் என்று தோன்றுகிறது. இது உண்மையான சமூகநீதி அல்ல.
கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் மட்டும் இட ஒதுக்கீடு வழங்குவதன் மூலம் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூகநிலையை முன்னேற்றி விட முடியாது. அவர்களுக்கு அரசியல் அதிகாரம், அதிலும் குறிப்பாக உள்ளூர் அளவில் தங்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான கிராம உள்ளாட்சி அமைப்புகளில் அவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டியது மிகவும் அவசியம் ஆகும்.
எனவே, கிராம உள்ளாட்சிகளில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கிடைத்திருக்கும் பிரதிநிதித்துவம் எவ்வளவு என்பது குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
அந்த பிரதிநிதித்துவம் அவர்களின் மக்கள்தொகையை விட குறைவாக இருக்கும் பட்சத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை தமிழக அரசு வரும் கூட்டத் தொடரின் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
மேலும்
-
தர்மபுரி வெடிவிபத்தில் பலியானவர்கள் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்: அன்புமணி
-
திருநெல்வேலி அருகே 5 பேர் கொலை: 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது கோர்ட்
-
இம்ரான்கான் கட்சி தலைவர்கள் வீடுகளில் சோதனை: 12 பேர் கைது
-
வெள்ளியங்கிரி மலையில் பறந்த த.வெ.க. கொடி!
-
உலகின் ஒவ்வொரு சமையலறையிலும் இந்திய விவசாயியின் பொருள் என்பதே எனது கனவு: பிரதமர் மோடி
-
தாக்கரே சகோதரர்கள் மீண்டும் இணையும் வாய்ப்பு; மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு