டில்லியின் புதிய சபாநாயகர் ஆனார் விஜேந்தர் குப்தா!

புதுடில்லி: புதுடில்லியின் சட்டசபையின் புதிய சபாநாயகராக பா.ஜ., மூத்த தலைவரும், எம்.எல்.ஏ.,வுமான விஜேந்தர் குப்தா தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.



புதுடில்லி சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்று பா.ஜ., ஆட்சியை பிடித்துள்ளது. யாரும் எதிர்பாராத விதமாக முதல் முறையாக எம்.எல்.ஏ.,வான ரேகா குப்தா முதல்வராக அறிவிக்கப்பட முறைப்படி அவரும் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டார்.


முதல்வர் பதவியை தொடர்ந்து சட்டசபையின் புதிய சபாநாயகர் யாராக இருப்பார் என்று எதிர்பார்ப்பு நிலவியது. இந் நிலையில், புதிய சபாநாயகராக பா.ஜ., மூத்த தலைவரும், ரோகிணி தொகுதியில் போட்டியிட்டு வென்றவருமான விஜேந்தர் குப்தா தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.


முதல்வர் ரேகா குப்தா அவரது பெயரை முன்மொழிய. அவையில் குரல் ஓட்டெடுப்பு மூலம் விஜேந்தர் குப்தா தேர்வாகி இருக்கிறார்.


அவரின் தேர்வுக்கு முதல்வர் ரேகா குப்தா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது;


தேசிய தலைநகருக்காக அவர் நிறைய பணி செய்துள்ளார். 3 முறை எம்.எல்.ஏ.,வாக தேர்வாகி உள்ளவர். இந்த அவைக்கு அவரின் அனுபவம் தேவையானதாக இருக்கும். அவரின் தலைமையின் கீழ் உறுப்பினர்கள் தங்கள் குரலை முன் வைப்பார்கள்.


இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement