மூளை இல்லாதவர்கள்... பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகத்தை திட்டி தீர்த்த அக்தர்

9


இஸ்லமாபாத்: இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்த நிலையில், அந்நாட்டின் கிரிக்கெட் வாரியத்தை முன்னாள் வீரர் சோயிப் அக்தர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி எளிதில் தோற்கடித்தது. இந்தப் போட்டிக்கு முன்பாக, இந்தியாவுக்கு சர்ப்பிரைஸ் காத்திருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நிர்வாகத்தினர் கூறி வந்தனர்.

ஆனால், அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, நேற்றைய ஆட்டம் அமைந்து விட்டது. இதன் காரணமாக, பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள், ரசிகர்கள், பாகிஸ்தான் அணியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நிர்வாகத்தை, 'மூளையில்லாதவர்கள்' என்று விமர்சித்துள்ளார்.

இது குறித்து வெளியிட்ட வீடியோவில் அவர் கூறியதாவது: பாகிஸ்தான் தோல்வியடைந்தது எனக்கு எந்தவித ஏமாற்றத்தையும் கொடுக்கவில்லை. ஏனெனில் என்ன நடக்கப் போகிறது என்பது எனக்கு முன்பே தெரியும். 5 முழுநேர பவுலர்கள் இன்றி விளையாடினால் இந்த நிலைமை தான். மற்ற அணிகள் 5 சிறந்த பவுலர்களுடன் விளையாடும் போது, நீங்கள் ஆல் ரவுண்டர்களை தேர்வு செய்துள்ளீர்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று எனக்கு தெரியவில்லை. பாகிஸ்தான் அணி நிர்வாகம் மூளையில்லாமல், தெளிவற்று இருப்பதாக நினைக்கிறேன். இது பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது, இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement