தாக்கரே சகோதரர்கள் மீண்டும் இணையும் வாய்ப்பு; மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு

மும்பை: மகாராஷ்டிரா அரசியலில் எதிரும் புதிருமாக இருந்த உத்தவ் தாக்கரே, அவரது சகோதரர் ராஜ் தாக்கரே இருவருக்கும் இணக்கமான சூழல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சிவசேனா கட்சியை தோற்றுவித்த பால் தாக்கரேவின் மகன் உத்தவ் தாக்கரே. இந்த கட்சியில் முன்னணித் தலைவராக இருந்தவர் ராஜ் தாக்கரே. இவர், பால் தாக்கரேவின் சகோதரர் ஸ்ரீகாந்த் தாக்கரேவின் மகன்.
ராஜ் தாக்கரே, உத்தவ் தாக்கரே உறவில் இன்னொரு சிறப்பும் உண்டு.
இருவரது தந்தையரும் அண்ணன்- தம்பி என்பதைப் போல, இருவரது தாயாரும், அக்கா - தங்கை ஆவர்.
அதனால், இரு குடும்பத்தினரும் மிகவும் நெருக்கமாக இருந்தனர்.
இந்நிலையில் 2005ம் ஆண்டு கட்சியில் பால் தாக்கரேவுக்கு அடுத்த வாரிசு யார் என்பதில் மோதல் ஏற்பட்டது.
இதில் உத்தவ் தாக்கரேவுக்கு பால் தாக்கரே ஆதரவு தெரிவித்ததால் வெறுப்புற்ற ராஜ், கட்சியை விட்டு வெளியேறினார். மகாராஷ்டிரா நவநிரமாண் சேனா என்ற பெயரில் தனிக்கட்சி ஆரம்பித்து நடத்தி வருகிறார். தொடர்ந்து தேர்தல்களிலும் போட்டியிட்டு வருகிறார். பெரிய அளவில் வெற்றி பெற விட்டாலும், அவரது வேட்பாளர்கள் கணிசமான ஓட்டுக்களை பிரித்து, சிவசேனாவின் தோல்விக்கு வழி வகுக்கின்றனர்.
இதனால் இரு தரப்பினர் இடையே 20 ஆண்டுகளாக விரோதம் நீடித்து வந்தது.
உத்தவ் தாக்கரே அரசை எக்நாத் ஷிண்டே கவிழ்த்துவிட்டு சென்ற போதும், ராஜ் தாக்கரே, உத்தவ் தாக்கரேவையே குற்றம் சாட்டினார்.
இப்படி இருந்த சூழல், தற்போது மெல்ல மெல்ல மாறி வருகிறது.
ராஜ், உத்தவ் இருவரும் நேருக்கு நேர் சந்திக்காத நிலை மாறி உள்ளது. கடந்த மூன்று மாதங்களில் மட்டும், மூன்று வெவ்வேறு நிகழ்வுகளில், இரு குடும்பத்தினரும் சந்தித்து பேசி உள்ளனர்.
இருவரும் சிரித்து பேசியபடி இருக்கும் படங்கள் வெளியாகி உள்ளன. சமீபத்தில் நடந்த மகாராஷ்டிரா தேர்தலில், ராஜ் தாக்கரேவின் மகன் தேர்தலில் போட்டியிட்டார். அந்தத் தொகுதியில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா வேட்பாளரை வாபஸ் வாங்கும் படி ராஜ்தாக்கரே தரப்பு வலியுறுத்தியது.ஆனால் அதை ஏக்நாத் ஷிண்டே மறுத்துவிட்டார்.
விளைவு, தேர்தலில் ராஜ் தாக்கரே மகன் தோற்கடிக்கப்பட்டார். இந்த வருத்தமும் ராஜ் தாக்கரேவுக்கு இருக்கிறது.இத்தகைய சூழலில்தான், சகோதரர்கள் ராஜ் மற்றும் உத்தவ் இருவரும் அடிக்கடி சந்திக்க தொடங்கி இருக்கின்றனர்.இதனால் மீண்டும் இரு தரப்பும் இணைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது.




மேலும்
-
யார் அந்த சார் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்; எல்லாம் ஞானசேகரன் செயல்!
-
13 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம்
-
ரூ.70 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சார் பதிவாளர் கைது!
-
தர்மபுரி வெடிவிபத்தில் பலியானவர்கள் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்: அன்புமணி
-
திருநெல்வேலி அருகே 5 பேர் கொலை: 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது கோர்ட்
-
இம்ரான்கான் கட்சி தலைவர்கள் வீடுகளில் சோதனை: 12 பேர் கைது