கடத்தல் அதிகரிப்பு: கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு

சென்னை: தமிழகத்தில் ஆளும் கட்சியின் ஆதரவோடு கடத்தல்கள் அதிகரித்திருப்பதாக புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி குற்றம்சாட்டி உள்ளார்.



அவர் அளித்த பேட்டி விவரம் வருமாறு:


தி.மு.க.,வானது நிறைவேற்ற முடியாத விஷயங்களை மட்டுமே வாக்குறுதியாக அளித்துள்ளது இதற்கு எடுத்துக்காட்டாக நீட் தேர்வு உடனடியாக ஒழிப்போம் என்றார்கள். ஒரே கையெழுத்தில் முடித்து விடுவோம் என்றார்கள். அரசு ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டத்தை செயல்படுத்துவோம் என்றார்கள், ஆனால் இன்று வரை செயல்படுத்தவில்லை.


இதை அனைத்தையும் தி.மு.க.,வினுடைய பித்தலாட்டம் . தி.மு.க., தொடர்ந்து தனது இரு மொழிக் கொள்கையை நிலை நிறுத்துமானால் மக்களிடையே அதனுடைய மதிப்பு ஜீரோ நிலைக்கு சென்று விடும். ஹிந்தி படிக்க கூடாது என்று சொல்வதற்கு தி.மு.க.,விற்கு என்ன உரிமை இருக்கிறது.


அரசியல் சாசன சட்டத்தில் 19,20 ஆகிய பிரிவுகள் ஜாதி மற்றும் மதம் இனம் ரீதியாக பிரிவினை காட்டக்கூடாது என்பதை அறிவுறுத்துகிறது இதன் மூலமே தி.மு.க., அரசு மீது 356 வது பிரிவினை பயன்படுத்த முடியும்.


ராமநாதபுரம் கடற்கரை ஓர பகுதியில் இருந்து ஆளும் கட்சியின் ஆதரவோடு கடத்தல்கள் அதிகரித்திருக்கிறது. கஞ்சா போன்ற போதை வஸ்துகள் அதிகளவில் நடமாடுகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய அரசினுடைய உளவுத்துறை தனிப்படையை அமைத்து பாதுகாப்பினை ஏற்படுத்த வேண்டும்.


மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களுக்கு உரிய வாழ்வாதாரத்தை தமிழக அரசு வழங்க வேண்டும். அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டினால் அம்மக்கள் கால்நடைகளை வளர்ப்பதற்கு எங்கே செல்வார்கள். மேய்ச்சல் நிலங்கள் எங்கே இருக்கிறது.


இவ்வாறு கிருஷ்ணசாமி பேட்டி அளித்தார்.

Advertisement