உடல் பருமன் தடுப்பு பிரசாரம்; 10 பேரை பரிந்துரைத்த மோடி

புதுடில்லி : உடல் பருமன் பிரச்னைக்கு எதிராக, 10 சதவீதம் எண்ணெயை குறைப்போம் என்ற விழிப்புணர்வு பிரசாரத்துக்காக, பிரதமர் நரேந்திர மோடி, 10 பேரை அறிவித்துள்ளார்.


இதில், ஜம்மு - காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா, நடிகர்கள் மோகன்லால், மாதவன், தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.


பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில், மன் கீ பாத் எனப்படும் மனதின் குரல் என்ற ரேடியோ நிகழ்ச்சியில் உரையாற்றி வருகிறார்.


நேற்று முன்தினம் ஒலிபரப்பான நிகழ்ச்சியில், உடல் பருமன் பிரச்னை குறித்து தன் கவலையை அவர் தெரிவித்தார். 'ஒவ்வொரு மாதமும், உணவில் 10 சதவீதம் அளவுக்கு எண்ணெயை குறைக்க வேண்டும்.


'இதை நாம் சவாலாக ஏற்று, மேலும் 10 பேரை அதில் பங்கேற்க அழைப்பு விடுக்க வேண்டும்' என, அவர் கூறியிருந்தார்.


பிரதமர் மோடியின் பேச்சு பரவலாக வரவேற்பை பெற்றுள்ளது. உடல் பருமன் என்பது தற்போது மிகப்பெரும் பிரச்னையாக உருவெடுத்து வருவதாக டாக்டர்கள் பலரும் கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில், எண்ணெயை குறைக்கும் தன் விழிப்புணர்வு பிரசார இயக்கத்துக்காக, 10 பேரின் பெயர்களை பிரதமர் மோடி நேற்று வெளியிட்டார்.


ஜம்மு - காஷ்மீர் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சித் தலைவருமான ஒமர் அப்துல்லா, தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா, 'இன்போசிஸ்' இணை நிறுவனர் நந்தன் நிலேகனி ஆகியோரின் பெயரை அவர் குறிப்பிட்டிருந்தார்.


பிரபல நடிகர்கள் மோகன்லால், மாதவன், பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல், துப்பாக்கிச் சுடும் சாம்பியன் மனு பாகர், பளு துாக்கும் வீராங்கனை மீராபாய் சானு, எம்.பி.,யும், நன்கொடையாளருமான சுதா மூர்த்தி ஆகியோரின் பெயரையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


போஜ்புரி நடிகரும், அரசியல்வாதியுமான தினேஷ் லால் யாதவும் இந்த பட்டியலில் உள்ளார்.

Advertisement