வரும் 27ல் ஆஜராக சீமானுக்கு சம்மன்

சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீசார் சீமானுக்கு சம்மன் அனுப்பி உள்ளனர்.

தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி விட்டதாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி, சென்னை, வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதையடுத்து, சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டன.

இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தை சீமான் நாடினார். வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன், 'விஜயலட்சுமி புகரின் கீழ் பதியப்பட்டிருக்கும் வழக்கை ரத்து செய்ய முடியாது' எனக் கூறி, சீமான் கோரிக்கையை நிராகரித்தார்.

கூடவே, இந்த வழக்கில் 12 வாரத்துக்குள், இறுதி அறிக்கையை போலீசார் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இதையடுத்து, வரும் 27ல் விசாரணைக்கு சீமான் ஆஜராகுமாறு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

Advertisement